அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள் | Limestone mines Threatening people

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (17/01/2018)

கடைசி தொடர்பு:18:25 (17/01/2018)

அச்சுறுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள்! சிமென்ட் ஆலைகளுக்கு எதிராகக் கொந்தளித்த கிராம மக்கள்

சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூடும் வரையிலும் விடப்போவதில்லை என்று பனங்கூர் கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பனங்கூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தைச் சுற்றி ராம்கோ, செட்டிநாடு, டால்மியா மற்றும் அரசு சிமென்ட் ஆலைகளுக்குச் சொந்தமான 7-க்கும் மேற்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் உள்ளன. இதில் சுரங்கம் தோன்றுவதற்காக இரவு நேரத்தில் வெடி வைப்பதால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இரவு பகல் பாராமல் கனரக வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்படுவதோடு விவசாயமும் பாதிக்கப்படுகின்றன.

அடிக்கடி பல்வேறு விபத்துகள் ஏற்படுகின்றன. அரசின் விதிகளை மீறி அதிக ஆழத்தில் சுணணாம்புக்கல் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள கிராமங்களிலும் குடிநீர் பிரச்னை ஏற்படுகின்றன. இவ்வாறு மக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை அரசு ஆய்வு செய்து அரசின் விதிமுறைகளை மீறிய சுரங்கங்களை மூட வேண்டும். அந்த ஆலையின் உரிமத்தைத் தடை செய்ய வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பனங்கூர் கிராமத்தில் உள்ள இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சுண்ணாம்புக்கல் சுரங்கத்துக்கு நிலம் கொடுத்துவிட்டு வாழ்வாதாரம் இன்றி உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் கிராம மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.