கூலித்தொழிலாளியின் உயிரைப் பறித்த இட்லி! சோகத்தில் முடிந்த சாப்பிடும் போட்டி

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்ட கூலித்தொழிலாளி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிக்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னத்தம்பி. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இவரது கிராமத்தில் விளையாட்டுப் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வந்தன. அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நேற்று இரவு இட்லி சாப்பிடும் போட்டி நடந்தது. விதிமுறைகளின்படி குறைந்த நிமிடங்களில் அதிகமான இட்லியை யார் சாப்பிடுகிறாரோ அவரே வெற்றி பெற்றவர். ஜாலியும் கேலியும் கொண்டாட்டமும் உற்சாகமுமாகப் போய்க்கொண்டிருந்த இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆர்வமுடன் முன்வந்தார் சின்னத்தம்பி. கலந்துகொண்ட போட்டியாளர்கள் முன்பு இட்லிகளும் தண்ணீரும் வைக்கப்பட்டிருந்தன. மளமளவென இட்லிகளை வாய்க்குள் திணித்தார் சின்னத்தம்பி. எப்படியும் போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக, வரிசையாக இட்லியை வாயில் திணித்ததால், அவரது தொண்டையை அடைத்துக்கொண்டுவிட்டது.

தொடர்ந்து விக்கலும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் பதறியபடி, `தண்ணீரைக்குடி' என்று கூறியிருக்கிறார்கள். தண்ணீரைக் குடித்ததும் அது உடனடியாக மூக்கில் ஏறி இருக்கிறது. அதன்காரணமாக, அவருக்குத் தும்மல் ஏற்பட்டு, இட்லி துணுக்குகளும் தண்ணீரும் சின்னத்தம்பியின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளிப்பட்டிருக்கின்றன. தண்ணீர் தொண்டைக்குள் இறங்காததாலும் தொடர்ந்து விக்கல் வந்ததன் காரணமாகவும் கூடவே, தும்மல் வந்ததன் விளைவாகவும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்திருக்கிறார் சின்னத்தம்பி. ஊர்காரர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!