துப்புரவுத் தொழிலாளர்களை நெகிழவைத்த மாற்றுத்திறனாளி!

எட்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, தான் கூலி வேலை பார்த்து கிடைத்த பணத்தில் உடைகள் வாங்கிக் கொடுத்து பொங்கலைக் கொண்டாடி இருக்கிறார் மாற்றுத்திறனாளியான நாகராஜன்.

கரூர் மாவட்டம், கள்ளப்பள்ளிச் சேர்ந்த நாகராஜன்,100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிகிறார். அதில் கிடைக்கும் வருவாயில் மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்கித் தருவது, ஏழை மக்களுக்கு உதவுவது என்று செயல்பட்டு வருகிறார். அந்த வகையில்தான், பொங்கல் விழாவை முன்னிட்டு எட்டு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு தனது சம்பளப் பணத்தில் வேட்டி, சேலைகளை வாங்கிக் கொடுத்து, துப்புரவுத் தொழிலாளர்களை நெகிழ வைத்திருக்கிறார்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய நாகராஜன், "இந்த உலகில் மனிதனாகப் பிறப்பது ஒருமுறைதான். அதில், முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவி செய்வோம்ங்கிற எண்ணம் கொண்டவன் நான். அதேபோல், பொங்கல் என்பது ஜாதி, மதம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் கொண்டாடும் தினம். இந்த நாளில் நான் மட்டும் கொண்டாடுவது இல்லாமல், மற்றவர்களையும் கொண்டாட வைப்பதே என்னுடைய மகிழ்ச்சியாக நினைத்தேன். அதனால், கடந்த சில ஆண்டுகளாக நான் பள்ளி மாணவர்களுக்கு உடைகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்கிக் கொடுத்து, அவர்களோடு கொண்டாடி இருக்கிறேன். இந்த ஆண்டு கள்ளப்பள்ளி ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எட்டு நபர்களுக்கு நான் வைத்திருந்த சம்பளப் பணத்தில் வேட்டி, சேலைகள் வாங்கி வழங்கினேன். அதில் எனக்கும் மகிழ்ச்சி; அவர்களுக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து 100 நாள் வேலை பார்த்து, அதில் வருகின்ற வருமானம் முழுவதையும் இதுபோல் சேவை செய்வதற்காகப் பயன்படுத்துவேன். என் வாழ்நாள் முழுக்க எனது இந்தச் சேவை தொடரும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!