பாம்பன் பாலத்தில் பற்றி எரிந்த தீ! பதறிப்போன வாகன ஓட்டிகள் | Fire accident on Pamban road bridge

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (17/01/2018)

கடைசி தொடர்பு:16:45 (17/01/2018)

பாம்பன் பாலத்தில் பற்றி எரிந்த தீ! பதறிப்போன வாகன ஓட்டிகள்

பாம்பன் சாலை பாலத்தின் வழியாக வரும் மின்சாரக் கேபிளில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதால் காவிரி குடிநீர் குழாய் மற்றும் தொலை தொடர்பு கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. திடீரென பற்றி எரிந்த தீயால் வாகன ஓட்டிகளும் மீனவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

பாம்பன் சாலை பாலத்தில் மின்கசிவினால் தீ விபத்து
 

மண்டபத்திலிருந்து பாம்பன் சாலை பாலத்தின் வழியாகப் பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளுக்கு கேபிள் மூலமாக மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. இவற்றுடன் காவேரி குடிநீர் குழாய் மற்றும் பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு கேபிள்கள் பாலத்தின் இரு புறங்களிலும் உள்ள நடைபாதையின் கீழ்ப்பகுதிகள் வழியாகப் பதிக்கப்பட்டுள்ளன. இதில் ராமேஸ்வரத்துக்குப் பாலத்தின் இடதுபுறம் வழியாகவும் பாம்பனுக்கு வலதுபுறம் வழியாகவும் மின்சாரம் கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில், இன்று காலை பாம்பன் சாலை பாலத்தின் வலதுபுறம்  வழியாக வரும் மின்சார கேபிளில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகளும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். மேலும், ராமேஸ்வரம் தீவுப் பகுதிக்கு வரும் மின்சாரத்தை மின்வாரிய ஊழியர்கள் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து போலீஸார் மற்றும் மண்டபத்திலிருந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாலத்தின் நடைமேடையை அகற்றி தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் தீவுப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் மின் தடை ஏற்பட்டது.

பாம்பன் பாலத்தில் மின் கேபிளில் தீ விபத்து

தீயினால் சேதம் அடைந்த மின் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்களைச் சீரமைக்க வெளியூரிலிருந்து அலுவலர்கள் வர உள்ள நிலையில் மாற்றுப் பாதை வழியாகப் பாம்பன் பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, இருமுறை இது போன்று பாம்பன் சாலை பாலத்தில் உள்ள மின்சார கேபிள்களில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, மின் கசிவு ஏற்படாத வகையில் தரமான மின்சார கேபிள்களைப் பயன்படுத்த பாம்பன் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 


அதிகம் படித்தவை