வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (17/01/2018)

கடைசி தொடர்பு:19:50 (17/01/2018)

`என் தொகுதி மாணவன் சரத்பிரபு மரணத்துக்கு நீதி வேண்டும்' - மத்திய அரசை எச்சரிக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ

டெல்லி யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் எம்.டி பொது மருத்துவம் பயின்று வந்த மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள அவரது இல்லத்துக்கு இரங்கல் தெரிவிக்க வந்த திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "எனது தொகுதியைச் சேர்ந்த மாணவன் சரத்பிரபு, டெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் மர்மமான முறையில் மரணமடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சரத்பிரபுவின் பிரேத பரிசோதனை அறிக்கைகூட இன்னும் வெளியாகாத நிலையில், அவரின் மரணம் தற்கொலை என்றுகூறி ஊடகங்களில் செய்தி வருவது பெரும் மனவேதனையைக் கொடுக்கிறது. இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2016-ல் எய்ம்ஸ் கல்லூரியில் பயின்ற திருப்பூர் மாணவன் சரவணன் என்பவரும் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்.

தமிழகத்தில் இருந்து செல்லக்கூடிய மாணவர்களுக்கு டெல்லியில் உரிய பாதுகாப்பு இல்லாமல்போவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சரத்பிரபுவின் மரணம் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசி இருக்கிறேன். டெல்லியில் உள்ள அரசுக்கும் காவல்துறையிடமும் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறியிருக்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சரும் டெல்லியில் பேசி, தேவையான ஏற்பாடுகளைச் செய்துகொண்டு இருக்கிறார்.

முதல்வர் பழனிசாமியின் கவனத்துக்கும் கொண்டுசென்று, மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தயாராக வேண்டும். என் தொகுதியைச் சேர்ந்த ஒரு மாணவன் உயிரை இழந்திருக்கிறான். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் அளவுக்கு நீதி விசாரணை வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். அதுவும் இல்லையென்றால், நீதிமன்றம் மூலமாகவும் உண்ணாவிரதம் இருந்தும் இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மாநில அரசு செய்யும்" என்றார்.