வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (17/01/2018)

கடைசி தொடர்பு:18:09 (17/01/2018)

‘ஆயிரம் பேர் குக்கர் சின்னம் கேட்பார்கள்...!’ - தினகரனுக்கு எதிராக சீறிய எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

மாநிலம் முழுவதும் இருக்கும் தொண்டர்களை ஒருங்கிணைப்பதற்காக தனிக்கட்சி முடிவில் இருந்த தினகரனைப் பின்வாங்க வைத்துள்ளனர் சசிகலா ஆதரவாளர்கள். ‘இரட்டை இலையை மீட்பதுதான் நமது நோக்கம். அந்த இலக்கை தனிக்கட்சி சிதைத்துவிடும்' என வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து, ‘புதிய கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே இல்லை’ என உறுதியாகக் கூறிவிட்டார். 

உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களைக் களம் இறக்கத் திட்டமிட்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் தினகரன் அணிக்குப் பெரிய செல்வாக்கு எதுவும் இல்லை. டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த விரும்புகிறார் தினகரன். ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் தனி சின்னத்தோடு போட்டியிட வேண்டும் என்றால், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இருக்க வேண்டியது அவசியம். அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்குத்தான் தனிச் சின்னம் கிடைக்கும் என்பதால், அதற்கான வேலைகளைத் துரிதப்படுத்தினார் டி.டி.வி. ஏற்கெனவே தொடங்கப்பட்ட 'தீந்தமிழன் தினகரன் பேரவை' என்ற பெயரிலேயே உறுப்பினர் சேர்ப்புப் படிவங்களை விநியோகிக்கத் தொடங்கினர் தினகரன் ஆட்கள். இந்த முயற்சியை தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சில சீனியர் நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ' அவர் கட்சி தொடங்கினால் நாங்கள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிப்போம். நாங்கள் எப்போதும் அ.தி.மு.கதான். சின்னம்மாதான் எங்கள் பொதுச் செயலாளர்' எனப் பதிலளித்தார் தங்க.தமிழ்ச்செல்வன். இதனையடுத்து தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும்விதமாக, ‘தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை' எனப் பேட்டியளித்தார். 

தினகரன்தினகரன் ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். “அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரால் எங்களால் நீண்டகாலம் இயங்க முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு அவ்வளவு எளிதாக முடிவுக்கு வரப் போவதில்லை. அதற்குள் இந்த ஆட்சியும் முடிவுக்கு வந்துவிடும். ‘எப்போது தேர்தல் வந்தாலும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை முழுமையாக நமக்கு வந்து சேரும்’ என்பதில் உறுதியாக இருக்கிறார் தினகரன். இதன்மூலம் தி.மு.க கூட்டணிக்குப் பலத்த சேதாரத்தை அவரால் உருவாக்க முடியும். ' ஆர்.கே.நகரில் தி.மு.க என்ன வாக்குகளை வாங்கியதோ, அதே வாக்குகள்தாம் அந்தக் கட்சிக்கு மாநிலம் முழுக்கக் கிடைக்கப் போகிறது' எனப் பேசி வருகிறார் தினகரன்.

'தன்னுடைய தலைமைக்கு மட்டுமே மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது' என நினைக்கிறார். இந்த வாதத்தை குடும்ப ஆட்கள் விரும்பவில்லை. அதனால்தான் தினகரனுக்கு எதிராக நேரடியாகப் பேசத் தொடங்கியுள்ளனர். 'தனிக்கட்சி தொடங்கினால் மட்டுமே மீண்டும் குக்கர் சின்னம் கிடைக்கும். இதே சின்னத்தை வீதிக்கு வீதி கொண்டு போக முடியும்' என்பதில் தெளிவாக இருக்கிறார் தினகரன். ஆளும்கட்சியின் அனைத்துத் தடைகளையும் எளிதாக முறியடிக்க முடியும் எனவும் உறுதியாக நம்புகிறார்" என்கிறார். 

ஆனால், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கருத்து வேறாக இருக்கிறது. தினகரனின் முயற்சிகளைப் பற்றிப் பேசிய முதல்வர், ' உள்ளாட்சியில் நமது ஆட்சிதான் கொடி கட்டிப் பறக்க போகிறது. இவர்  மீண்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என்பதைவிட மிகப் பெரிய நகைச்சுவை இருக்க முடியாது. நாங்கள் நினைத்தால் குக்கர் சின்னமே கிடைக்காமல் செய்துவிட முடியும். யாராவது ஒருவரைப் புதிதாகக் கட்சியைத் தொடங்க வைத்து, அவர்களுக்கு குக்கர் சின்னத்தை வாங்கிக் கொடுத்துவிட முடியும். குக்கர் சின்னம் என்பது நிரந்தரமல்ல. அது ஆர்.கே.நகரோடு முடிந்துபோய்விட்டது. தினகரன் ஒரு சாதாரண சுயேச்சை. அவர் தனிக்கட்சி ஆரம்பித்தால்தான் சின்னம் கிடைக்கும். உள்ளாட்சித் தேர்தலில் சட்டதிட்டம் எப்படிச் சொல்கிறதோ அதன்படிதான் செயல்பட முடியும்.

தேர்தல் வந்தால் ஆயிரம் பேர் குக்கர் சின்னத்தைக் கேட்பார்கள். அதைப் பற்றி நாம் துளியும் கவலைப்பட வேண்டாம். ஆர்.கே.நகர் வேறு. 233 தொகுதி என்பது வேறு. விருத்தாச்சலத்தில் 40 சதவிகித ஓட்டு வாங்கிய விஜயகாந்தால், தமிழ்நாட்டில் 8 சதவிகித வாக்குகளைத்தான் வாங்க முடிந்தது. அதனால் தினகரன் என்ன சிம்பளில் வேண்டுமானாலும் நின்றுவிட்டுப் போகட்டும். நம்முடைய எதிரி தி.மு.கதான். உள்ளாட்சியில் அதிகப்படியான மேயர்களை நாம் கைப்பற்ற வேண்டும். இப்போதே நான் மேயர்களை முடிவு செய்துவிட்டேன். அவர்களின் வெற்றிக்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். 

குடும்ப உறவுகளின் மோதல்கள், ஆளும்கட்சியின் அதிகாரம், சசிகலாவிடம் சமாதானம், ஆதரவாளர்களிடம் சமசரம் எனப் பலமுனைத் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். வழக்கம்போல, எந்தவித அழுத்தத்தையும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். 


டிரெண்டிங் @ விகடன்