`நிலமும் நீரும்கூட கடவுள்தான்!' - பழனி பக்தர்களுக்கு அறிவுரை!

பழனி என்பது மக்கள் நடந்து சென்று வழிபடும் ஒரு மரபு சார்ந்த தளம். இன்னும் 15 தினங்களில் தைப்பூசம் வர இருப்பதால், தற்போது மிக அதிகமானவர்கள் எல்லாச் சாலைகளிலும் நடந்து செல்லுகின்றனர். அப்படி நடைபயணம் செல்கின்றவர்கள் மக்காத பாலீத்தின் குப்பைகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வழி நெடுகிலும் சாலைகளின் இரு புறமும் எறிந்துவிட்டு போவதாகச் சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர்.

இதுபற்றி, பேசிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னையன், "வருடா வருடம் பழனிக்கு பாதயாத்திரைப் போகும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், சுகாதாரக் கேடும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பாலீத்தின் கவர்கள் என்ற எமனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. சேலம், தருமபுரி, திருப்பூரிலிருந்து வரும் பக்தர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை மற்றும் மொடக்குறிச்சி தாலுகாவில் உள்ள பூந்துறை வழியாகப் பழனிக்குப் பாதயாத்திரை செல்கிறார்கள். அவர்களுக்கு அங்கங்கே பல அமைப்புகள் அன்னதானமும் பாட்டில் தண்ணீரும் தருகிறார்கள். அதற்காகப் பயன்படுத்தும் அத்தனை பிளாஸ்டிக் பொருள்களையும் சாலைகளின் இருமருங்கிலும் வீசிவிட்டுப்போகிறார்கள். உணவு சாப்பிடப் பயன்படுத்திய தட்டையும் வீணான உணவையும் அங்கங்கே போட்டுவிட்டுப்போகிறார்கள். பக்தர்கள் இப்படிப் போடுவதை உணவு வழங்கிய அமைப்புகளும் அகற்றுவதில்லை. இல்லை சம்பந்தப்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி நிர்வாகங்களும் அப்புறப்படுத்துவதில்லை. தமிழக அரசும் இதுசம்பந்தமாகப் பக்தர்களுக்கு விழிப்பு உணர்வையோ மாற்று ஏற்பாட்டையோ செய்வதில்லை. இதனால், சாலைதோறும் பிளாஸ்டிக்குகள் முட்டுமுட்டாகக் கிடக்கிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்படப்போகிறது. அதனால், பக்தர்களுக்கு அவர்கள் பயன்படுத்தும் வீணாகும் பொருள்களைச் சேகரிக்க, அப்புறப்படுத்த தேவையான ஏற்பாட்டை அரசு உடனே செய்ய் வேண்டும். அதேபோல், பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களும் நிலமும் நீரும்கூட கடவுளைப் போன்றது என்பதை நினைவில் கொண்டு செயல்படனும்" என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!