"நான் இறந்ததும் என் கண்களை எடுத்து தானம் செய்யுடா பேரான்டி!" - இறுதி ஆசையை நிறைவேற்றிக்கொண்ட பாட்டி!

 

எவ்வளவுதான் படித்தாலும், தாங்கள் இறந்தபின் தங்களது கண்களையோ, மற்ற உடல் உறுப்புகளையோ மற்றவர்களுக்கு தானம் செய்ய விருப்பப்படுவதில்லை. 'அப்படிச் செய்தால், பாவம் வந்து சேரும்...' என்று சொல்பவர்களும் உண்டு. இந்தச் சூழலில், படிப்பு வாசனை அரவே அற்ற 85 வயது பாட்டி, உயிரோடு இருக்கும்போது, 'தான் இறந்தால், தனது கண்களை தானம் செய்யுங்கள்' என்று தனது பேரனிடம் சொல்ல, அதேபோல் நேற்று இறந்த அந்தப் பாட்டியின் கண்களை பேரன் எடுத்து, தானம் செய்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் பசுவபட்டி, கே.சி.நகரைச் சேர்ந்த பாட்டம்மாள் என்பவர்தான் அந்த அதிசய பாட்டி. இவர் நேற்று (16/01/2018) நண்பகலில் வயோதிகம் காரணமாக காலமானார். அதைத்தொடர்ந்துதான், அவரது பேரன் ஈஸ்வரமூர்த்தி உடனடியாக ஈரோடு அரிமா சங்கத்துக்குத் தகவல் கொடுத்து அவர்கள் மூலம் பாட்டம்மாள் கண்களை எடுக்க வைத்து, கண்தானமாக கொடுத்து, பாட்டியின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளார். கூலி விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த பாட்டம்மாள் தனது 85-வது வயதில் உயிர் துறந்தும் தன் இரு கண்களின் மூலம் இருவருக்கு ஒளிதந்தது அந்தப் பகுதி மக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது.

இதைப் பற்றி, நம்மிடம் பேசிய பாட்டம்மாளின் பேரனான ஈஸ்வரமூர்த்தி, "எனது பாட்டிக்கு இரக்க குணம் அதிகம். எங்க குடும்பமே வசதியற்ற, சாதாரண கூலி வேலை பார்க்கும் குடும்பம். ஆனால், யாராச்சும் உதவின்னு கேட்டு வந்தாலோ, சாப்பிடலைன்னு சொல்லி வந்தாலோ, இருக்கிறதை எடுத்துக் கொடுத்துடுவார். தான் சாப்பிட வச்சுருக்கும் சொற்ப சாப்பாட்டை அவர்கள் சாப்பிட கொடுத்துடுவார். அவரோட அந்த உயரிய குணம் எங்களுக்குகூட இல்லை. இதனால், எங்க ஊர் முழுக்க எங்க பாட்டிக்கு நல்ல பேர். சில நாள்களுக்கு முன்பு என்னை கூப்புட்டு, 'பேரான்டி, நான் இன்னும் அதிக நாள் உயிர் வாழமாட்டேன். அப்படி இறந்துட்டா, என் கண்களை எடுத்து தானம் பண்ணிடுங்க'ன்னு சொன்னதும் எங்களுக்கு ஆச்சர்யமாயிட்டு. படிக்காத இவருக்கு இதெல்லாம் எப்படி தெரியும்ன்னு ஆச்சர்யமாயிட்டோம். அவர் சொன்னதுபோலவே நேத்து இறந்துட்டார். அதனால், அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற அரிமா சங்கத்தின் மூலமா அவரோட கண்களை எடுத்து, தானம் பண்ணிட்டோம். எங்க பாட்டியை இப்போ ஈரோடு மாவட்டமே பாராட்டுது சார். இப்படி சாதிக்கலாம்ன்னு இப்பத்தான் தெரியுது" என்றார் நெக்குருகி போய்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!