வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (18/01/2018)

கடைசி தொடர்பு:08:32 (18/01/2018)

சரத்பிரபு மர்ம மரணத்தைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் செயல்பட்டு வரும் யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபு, விடுதி கழிவறையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், சரத்பிரபு தனக்குத்தானே இன்சுலின் ஊசி செலுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்களைத் தெரிவித்திருந்தனர். இந்தத் தகவல் சரத்பிரபுவின் குடும்பத்தை நிலைகுலையச் செய்ததோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

இந்நிலையில், சரத்பிரபுவின் மர்ம மரணத்தைக் கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாகத் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, `மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் படுகொலைகளை உரிய முறையில் அரசு விசாரணை நடத்த வேண்டும். டெல்லிக்கு மருத்துவ உயர்கல்வி பயிலச் செல்லும் தமிழகம் மற்றும் தென்னிந்திய மாணவர்களுக்கு அரசு உரிய முறையில் பாதுகாப்பு வழங்க வேண்டும்' போன்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.