வெளியிடப்பட்ட நேரம்: 20:51 (17/01/2018)

கடைசி தொடர்பு:12:32 (18/01/2018)

`இந்த 10 கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்க?' - கல்பாக்கம் அணு உலைக்கு எதிராகக் கொதிக்கும் மருத்துவர்

அணுக்கதிர் வீச்சு கசிவுக்கான காரணம் தெரியாமல் கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் ஒரு வாரத்துக்கும் மேலாக விழிபிதுங்கி நிற்கிறது. எவ்வளவோ கேட்டும் பதில் வராததால், ஆர்.டி.ஐ மூலம் தீர்வு காண முனைந்துள்ளார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.

கல்பாக்கம் அணுமின் நிலையம்

சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில், அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த 8-ம் தேதி இரவு முதல் அணு உலை நிறுத்தப்பட்டிருக்கிறது. வழக்கமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுபோல் அல்லாமல், இந்தமுறை அணுக் கதிர் வீச்சின் அளவு அதிகமானதாலேயே அணு உலை நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர். புகழேந்தியிடம் பேசினோம். ``கடந்தசில நாள்களுக்கு முன்னர் அணு உலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அன்றைய தினம் அணுக் கதிர்வீச்சு 200 DAC/hour என்பதில் தொடங்கி 1,000 DAC/hour என்ற அளவு வரை தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. இதனாலேயே, அணு உலை நிறுத்தப்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சாதாரண தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அணு உலையில் நிறுத்தப்பட்டிருப்பதாக நிர்வாகம் கூறி வருகிறது. இந்திய அணுசக்தித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக அணுக்கதிர் வீச்சுக் கசிவுக்கான காரணம் என்ன என்றும்; எந்தப் பகுதியில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டுள்ளது என்றும் கண்டுபிடிக்க முடியாமல் நிர்வாகம் திணறிவருகிறது'' என்று குற்றம் சாட்டினார். 

மருத்துவர் புகழேந்தி

அவர் மேலும், 
``1. எதிர்பாரா நிலையில் சென்னை அணுமின் நிலையம் 1-ஐ நிறுத்தக் காரணம் என்ன?

2. பிரச்னை என்னவென்று அறிந்து கொள்ளப்பட்டதா என விளக்கம் அளிக்கவும்?

3. பிரச்னை ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

4. கதிர்வீச்சின் அளவு வழக்கமான அளவைவிட உயர்ந்துள்ளதா. ஆம் எனில் எவ்வளவு உயர்ந்துள்ளது - எந்தெந்த இடங்களில்?

5. முதலில் 200 (DAC Hour) என இருந்த கதிர்வீச்சு சில தினங்களுக்குள் ஐந்து மடங்கு உயர்ந்து 1,000 (DAC Hour) என உயர்ந்தது உண்மைதானா?

6. 1,000 DAC hour என இருந்ததால் தொழில்நுட்ப விதிகளின்படி அவசர நிலை (Plant emergency) பிரகடனப்படுத்தப்பட்டதா?

7. கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் எங்கிருந்து, எதனால் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மையா?

8. கதிர்வீச்சுக் கசிவை சரி செய்ய இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை?

9. சென்னை அணுமின் நிலையம் 1-ல் புகைப் போக்கி வழியாக எவ்வளவு கதிர்வீச்சு சம்பவ தினத்திலிருந்து (8.1.2018) இன்று வரை வெளியேற்றப்பட்டது. அது பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட (271 Curie) அதிகம் இருந்ததா?

10. சென்னை அணுமின் நிலையம் 1-ஐ சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்களுக்கு புகைப் போக்கி வழியாக வெளியிடப்பட்ட கதிர்வீச்சு பாதிப்பின் காரணமாகச் சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படா வண்ணம் என்னத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? 

மேற்கூறப்பட்டக் கேள்விகள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சென்னை அணுமின் நிலையத்துக்கு அனுப்பப்பட்டவை. மிகவும் நம்பத்தகுந்த ஆட்கள் மூலம் இதுவரை எந்த இடத்தில் கதிர்வீச்சுக் கசிவு ஏற்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சிலர் நிலைய அதிகாரி ஓ.எஸ் (Operating Superintendent) செல்வகுமாரை அவரது கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டபோது, `இது பற்றி நான் கருத்துக் கூற ஒன்றுமில்லை' என்று பதிலளித்துள்ளார். ஆக, இதுவரை காரணம் தெரியாமல் கதிர்வீச்சுக் கசிவு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுப்புற மக்களின் அச்சம் நீக்க அணுசக்தி நிர்வாகம் மேல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் கூற முன்வருமா' என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.