வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (18/01/2018)

கடைசி தொடர்பு:08:56 (18/01/2018)

நெல்லையில் முதல்வர் படம் போட்ட பேனர் கிழிப்பு: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களால் பரபரப்பு!

நெல்லையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படத்துடன் கட்டப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது. டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களின் இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் சமாதானம் செய்துவைத்தனர்.

பேனர் கிழிப்பு - தொண்டர்கள்

முன்னாள் முதல்வரான எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்த தினம் நெல்லையில் இன்று சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க-வினரும் டி.டி.வி தினகரன் ஆதரவாளர்களும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர் படத்துக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். அத்துடன், நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டன. கட்சியினர் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படத்தின் பாடல்களை விருப்பத்துடன் கேட்டு ரசித்தனர். 

பின்னர், நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலையில் 10 மணிக்கு டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மாலை அணிவிக்கவும் 10.30 மணிக்கு அ.தி.மு.க-வினர் மாலை அணிவிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. முன்னதாக, அ.தி.மு.க-வினர் அந்த சிலையில் பேனர் ஒன்றைக் கட்டினார்கள். 

பேனரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படமும் இடம்பெற்றதுடன், ’அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் அன்புடன் வரவேற்கின்றது’ என எழுதப்பட்டிருந்தது. சிலைக்கு மாலை அணிவிக்க டி.டி.வி. தினகரன் அணியின் மாநகர மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, பாளையங்கோட்டை பகுதிச் செயலாளர் அசன் ஜாபர் அலி ஆகியோர் ஏற்பாட்டில் தொண்டர்கள் வந்தபோது அங்கு கட்டியிருந்த பேனரைப் பார்த்து கோபம் அடைந்தனர். 

அந்தச் சமயத்தில் அ.தி.மு.க-வினரும் வந்ததால், பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை வாழ்த்தி கோஷங்களை எழுப்பியதால் பதற்றம் கூடியது. இந்தச் சமயத்தில் சிலையின் முன்பகுதியில் கட்டப்பட்ட போஸ்டரை அகற்ற வேண்டும் என டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர். அதற்கு அ.தி.மு.க-வினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த பேனரை டி.டி.வி.தினகரன் ஆதரவு அணியினர் கிழித்து சுருட்டி எறிந்தனர். அதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலைமை ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்துவைத்தனர். பின்னர் இரு அணியினரும் தனித்தனியே மாலை அணிவித்துவிட்டு கோஷமிட்டபடியே கலைந்துசென்றனர்.