வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (18/01/2018)

கடைசி தொடர்பு:10:27 (18/01/2018)

வைரமுத்து மீது அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் - மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

'இந்துக்கள் புனிதமாக வழிபடும் ஆண்டாளை விமர்சித்த வைரமுத்து மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மயிலாடுதுறையில், ஸ்ரீ பரிமளரெங்கநாதர் ஆன்மிகப் பேரவையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  

சமீபத்தில், வைரமுத்துவின் ஆண்டாள் விமர்சனம், தமிழகமெங்கும் இந்துமத உணர்வாளர்களிடம் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஆங்காங்கே ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்துவதோடு, பல காவல் நிலையங்களில் வைரமுத்துவை கைதுசெய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தும்வருகின்றனர். அந்த வகையில், இன்று மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆஞ்சநேயர் கோயில் அருகில், ஸ்ரீ பரிமளரெங்கநாதர் ஆன்மிகப் பேரவை சார்பில், வைரமுத்துவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  

நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க நகரச் செயலாளர் மோடி கண்ணன், 'இந்துக்கள் புனிதமாக வழிபடும் ஆண்டாளை, கவிஞர் வைரமுத்து விமர்சித்து இந்துக்கள் மனதைப் புண்படுத்திவிட்டார். இந்து மதத்தைப்  பற்றி தரக்குறைவாகப் பேசிய வைரமுத்து, வேறு எந்த மதத்தையாவது இப்படி இழிவுபடுத்திப் பேச முடியுமா? எங்கோ ஒரு வெளிநாட்டில் தமிழ் அறியாத பைத்தியக்காரன் ஒருவன் எழுதிய கட்டுரையை தேடிக் கண்டுபிடித்துப் பேசவேண்டிய அவசியம் வைரமுத்துவுக்கு ஏன் வந்தது?  இந்துமதக் கடவுள்களைக் கேவலமாகப் பேசும் வைரமுத்து போன்றோர்களுக்கு நல்லபுத்தி புகட்டவேண்டும். தாயாரைப் பற்றித் தரக்குறைவாக வைரமுத்து பேசியதன்மூலம் இந்துமத உணர்வாளர்களை ஒன்றுசேர்த்திருக்கிறார். அவர்மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்வரை நமது போராட்டம் தொடரும்' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க