வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (18/01/2018)

கடைசி தொடர்பு:08:54 (18/01/2018)

`ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்!' - தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்

வன்முறையைத் தூண்டும் விதமாக நபிகள் நாயகத்தைப் பற்றி பேசிய ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வலியுறுத்தி, செய்துங்கநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மாநிலச் செயலாளர் அப்துல்ரஹிம், "இந்து மதத்தினர் வழிபட்டுவரும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள ஆண்டாளைப் பற்றி கவிஞர் வைரமுத்து இழிவாகப் பேசி விமர்சனம் செய்ததாகக் கூறி, அதை பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கண்டித்துப் பேசியுள்ளார். தங்களால் புனிதமாகக் கருதி மதிக்கப்பட்டு, வழிபட்டுவரும் ஆண்டாளைப் பற்றி யாரேனும் விமர்சனம்செய்து பேசினால் அதைக் கண்டிக்க ஹெச்.ராஜாவுக்கு உரிமை உள்ளது. 

ஆனால் இதைக் கண்டிக்கும் சாக்கில், "நபிகள் நாயகத்தை உன்னால் பேச முடியுமா? நபிகள் நாயகத்தின் மனைவிமார்களைப் பற்றி உன்னால் பேச முடியுமா என்று பேசி, இஸ்லாம் மதத்தை வம்புக்கு இழுத்துள்ளார் ஹெச்.ராஜா.   

இஸ்லாம் மதத்தினர் பெரிதாக மதித்துப் போற்றிவரும் நபிகள் நாயகத்தைப் பற்றியும், அவரது குடும்பத்தினரைப் பற்றியும் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.  

ஒற்றுமையாக வாழ்ந்துவரும் அனைத்து மத மக்களிடமும் மதவெறியைத் தூண்டும் விதமாகவும், இந்திய இறையாண்மைக்கும், மத ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையிலும் ஹெச்.ராஜா இப்படிப்  பேசி வருவதை  இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். 

இனிமேலும், அவர் நபிகள் நாயகத்தை வம்புக்கு இழுத்தால், இஸ்லாம் சமுதாயத்தினர் கடுமையான எதிர்வினையாற்ற வேண்டியது இருக்கும். இதேநேரத்தில், மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு தொடர்ந்து முஸ்லிம் மக்களை வஞ்சித்துவருகிறது. ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான மானியத்தை ரத்துசெய்துள்ளதாக பா.ஜ.க அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் நாங்கள் மகிழ்ச்சிதான் அடைந்துள்ளோம். ஏனென்றால், இந்த மானியம் என்ற பெயரில் விமானக்கட்டணத்தை அதிகமாக உயர்த்தி, எங்களிடம் வசூலித்துவந்த செயலுக்கு இதனால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

எங்களைப் பொறுத்தவரை மிகவும் வசதியானவர்கள்தான் ஹஜ் புனிதப்பயணம் செல்கின்றனர். இதனால், நாங்கள் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை" என்றார். ஆர்ப்பாட்டத்தில், ஹெச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க