``வடி வாய்க்காலைக் காணோம்!'' - புலம்பும் லாலாப்பேட்டை விவசாயிகள்!

    

நடிகர் வடிவேல், 'கிணத்தைக் காணோம்' என்று ஒரு படத்தில் அதிரிபுதிரி புகார் கொடுப்பதைப் போல, லாலாப்பேட்டை பகுதி விவசாயிகள், '500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வடிகாலா இருந்த வடிகாலை தூர்வாராததால, அந்த வடிகாலைக் காணோம். அதைத் தூர்வாரி மீட்டுத்தாங்க என்று கோரிக்கை வைக்கிறார்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கிறது லாலாப்பேட்டை. இந்தப் பகுதியில் இருக்கும் மேம்பாலத்துக்குக் கீழே, வடக்குப் பக்கம் 500 ஏக்கர் நிலங்களுக்கு வடிகாலாக இருந்த வாய்க்கால் தூர்ந்து போய், இருந்த இடம் தெரியாமல் போனதாக விவசாயிகள் அல்லாடுகிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய அவர்கள், ``இந்தப் பகுதியில் இருக்கும் 500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு வடிகாலா இந்த வடிவாய்க்கால்தான் இருந்துச்சு. எவ்வளவு மழை பெய்தாலும், வயலில் தங்காமல் இந்த வடிவாய்க்காலில் மழைநீர் ஓடி வடிந்துவிடும். ஆனால், இந்த வடி வாய்க்கால் கடந்த சில வருடங்களாக சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டும், பல இடங்களில் தூர்ந்தும் போயும்விட்டது. இந்தமுறை வரலாறு காணாத மழை பெய்ததால், இந்த 500 ஏக்கர் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி, விவசாயத்தைப் பாழாக்கியது. அப்பவே, 'இந்த வடி வாய்க்காலை முறையாகத் தூர் வாரி, விவசாயத்துக்கு உதவுங்கள்'னு பலர்கிட்டயும் கோரிக்கை வெச்சோம். 'இந்தா அந்தான்னு பந்தா காட்டுனாங்களேயொழிய, யாரும் இந்த வடி வாய்க்காலைத் தூர் வார நடவடிக்கை எடுக்கலை. இதனால், இப்போ அந்த வடிவாய்க்கால் இருந்த இடமே தெரியாமப்போயிட்டு. அதனால், எங்களுக்கு உதவக்கூடிய இந்த வடிவாய்க்காலை உடனே கண்டறிந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாகத் தூர் வார நடவடிக்கை எடுக்கணும். இல்லைனா, கரூர் டூ திருச்சி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று எச்சரித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!