வெளியிடப்பட்ட நேரம்: 10:04 (18/01/2018)

கடைசி தொடர்பு:10:37 (18/01/2018)

`ஒகி புயலால் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை 25' - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

கடந்த நவம்பர் மாதம், கன்னியாகுமரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வீசிய ஒகி புயலால், கடலுக்கு மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் பலர் காணமல் போயினர். இதையடுத்து, மீனவர்கள் பலர் பல வாரங்கள் கழித்து தமிழகக் கடல் எல்லை தாண்டியும் கரை திரும்பினர். சிலரது பிணங்கள் மட்டும் கரை ஒதுங்கின. இன்னும் பல நூறு மீனவர்கள் கரை திரும்பாத நிலை இருந்துவருகிறது. அவர்களைத் தேடும் பணியை அரசாங்கம் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயக்குமார்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், `ஒகி புயலால் காணமல்போன மீனவர்கள் திரும்பாவிட்டால், நிவாரணம் வழங்க வேண்டுமென்று மீனவர்கள் கோரினர். காணாமல்போன மீனவர்கள்பற்றி மனு அளித்தால், உடனடியாக நிவாரணம் வழங்கப்படும். அவர்களை அரசு இன்னமும் தீவிரமாகத் தேடிவருகிறது. ஜனவரி முதல் வாரத்தில்கூட மாலத்தீவு பகுதிகளில் மீனவர்களைத் தேடினோம். ஒகி புயலால் இறந்த மீனவர்களின் எண்ணிக்கை 25 ஆகும். காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 194' என்று தெரிவித்துள்ளார்.