`எஸ்.ஐ, திருமுருகனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' - திருபுவனத்தில் கொந்தளித்த மார்க்சிஸ்ட் கட்சியினர் | Cpm party protest against police officer in Thirupuvanam

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (18/01/2018)

கடைசி தொடர்பு:11:39 (18/01/2018)

`எஸ்.ஐ, திருமுருகனை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்' - திருபுவனத்தில் கொந்தளித்த மார்க்சிஸ்ட் கட்சியினர்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்துறையினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமியை கொலைவெறித்தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, திருப்புவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தவிர அனைத்துக் கட்சியினரும் கலந்துகொண்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் தலைமை வகித்தார்.

 


திருப்புவனம் நகரில், பூவந்தி செல்லும் சாலையில், சாலையோர வாரச்சந்தை உள்ளது. இங்கு, பேரூராட்சிக்கு வரி செலுத்தி காய்கறிக் கடை நடத்திவருகிறார்கள். இக்கடைகளை திருப்புவனம் காவல்துறையினர் சார்பு ஆய்வாளர் திருமுருகன், காவலர்கள் முத்துப்பாண்டி, சங்கர், ராஜா, நந்தகுமார் ஆகியோர், வியாபாரிகளை அடித்து, காய்கறிகளைத் தூக்கி சாலையில் வீசியிருந்தனர். மனிதநேயமில்லாமல் காய்கறி வியாபாரிகளை கம்பால் அடித்தனர். அப்போது, காய்கறி வாங்கவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது காவல்துறையினர், கந்தசாமியை கொடூரமாகத் தாக்கினர். குண்டுக்கட்டாகத் தூக்கி ஆட்டோவில் ஏற்றி காவல்நிலையம் கொண்டுசென்றனர். அங்கு, கந்தசாமியை ஜட்டியோடு நிறுத்தி லத்தியால் அடித்து, கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். கந்தசாமி, சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகிறார். சிகிச்சை பெறும் கந்தசாமியிடம் சிவகங்கை டி.எஸ்.பி மங்களேஸ்வரன் விசாரணை நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், கந்தசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை சார்பு ஆய்வாளர் திருமுருகன், காவலர்கள் மூன்று பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்திட வேண்டும்.  அவர்களை உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், காவல்துறையைக் கண்டித்து மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் ஜோதிராம், மதுரை மாநகர் செயலாளர் விஜயராஜன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், மதுரை முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நன்மாறன், அண்ணாமதுரை, மாநிலக்குழு உறுப்பினர் பொன்னுத்தாய், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயராமன், ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் பேசினார்கள். இதனிடையே, கந்தசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க