வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (18/01/2018)

கடைசி தொடர்பு:11:38 (18/01/2018)

`டக்வாக்' தண்டனையால் சென்னையில் மாணவன் பலியான பரிதாபம்!

சென்னையில் பள்ளி மாணவன் பலி

ள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்த மாணவனை வாத்து போல முட்டிபோட்டுச் செல்லும் தண்டனை கொடுத்ததால், மயங்கிவிழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், உடற்பயிற்சி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை முடிந்து நேற்று பள்ளிக்குத் தாமதமாக வந்த மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங், வாத்து போல முட்டிபோட்டுச் செல்லும் தண்டனை கொடுத்துள்ளார். இதில், 10-ம் வகுப்பு படிக்கும் நரேந்தர் என்ற மாணவன், முட்டிபோட்டு சிறிது நேரம் சென்றநிலையில், மயங்கிவிழுந்தான். ஆசிரியர்கள், மாணவனை ஆட்டோவில் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். முதலுதவி சிகிச்சைக்குப் பின், சென்னை ஸ்டான்லி மருத்துமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் மாணவன் நரேந்தர் பரிதாபமாக இறந்தான்.

காலை 10 மணிக்கு, நரேந்தரின் தந்தை முரளிக்கு பள்ளி நிர்வாகத்தினர் போன்செய்து, மாணவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்குக் கொண்டுசென்றிருப்பதாகத் தெரிவித்தனர். பள்ளிக்கு பரபரக்கச் சென்ற முரளியிடம், 'மாணவனின் இறப்பு இயற்கையானது' என்று கையொப்பம் வாங்கியுள்ளனர்.

பள்ளி மாணவன் பலி

பலியான மாணவனின் பெற்றோரிடம் சக மாணவர்கள், நடந்த சம்பவத்தைக் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியை நேற்று இரவு முற்றுகையிட்டனர். பள்ளிக்கு விரைந்துவந்த போலீஸார், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர். அதில், மாணவன் வாத்து போல முட்டிபோட்டுச் சென்று  மயங்கிவிழுவதும் பின்னர், ஆட்டோவில் எடுத்துச்செல்லப்படுவதுமான காட்சிகள் பதிவாகியிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, திரு.வி.க நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். மாணவன் பலிக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்வதாக போலீஸார் உறுதியளித்தனர். பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங்கை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தொடர்ந்து போராட்டம் நீடித்துவருவதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க