வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (18/01/2018)

கடைசி தொடர்பு:12:27 (18/01/2018)

`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ

"கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறிப்பிட்டு, தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்தார். கூடவே, 'சி.பி.ஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் 'என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அவரிடம் வைரமுத்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதில் கூறிய வைகோவிடம், கமல், ரஜினி அரசியல் பிரவேசம்குறித்து கேள்வி கேட்டதற்கு,  உடனே நக்கலாகச் சிரித்தார். பிறகு, "எப்படி ஓட்டு போடுவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை இருக்கிறதோ, அதேபோல கட்சி ஆரம்பிக்கவும் உரிமை இருக்கிறது.  என்னுடைய  54 வருட பொதுவாழ்க்கையில், 50 ஆயிரம் கிராமங்களுக்குச் சென்று, கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்திருக்கிறேன். பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் நடைப்பயணமாகவும் சென்றிருக்கிறேன். 5 வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறேன். மக்களைப் பற்றி நான் நன்றாக அறிவேன்.

கமலும் ரஜினியும், ஏதோ திடீர் புரட்சி செய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று முயல்கிறார்கள். அவர்கள் இருவரும் அப்படி என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று கிண்டல் தொனியில் பதிலளித்தார். ஹஜ் புனிதப் பயணம் மானியம் ரத்து, முத்தலாக் விவகாரம், ஆண்டாள் சர்ச்சை, சரத்பிரபு போன்ற பல விஷயங்கள் குறித்து பதில் அளித்த வைகோ, கமல், ரஜினி பற்றிய கேள்விக்கு மறைமுகமாக விமர்சித்தும் கிண்டலாகவும் பதில்தந்தது, அங்கிருந்த பத்திரிகையாளர்களுக்கு வியப்பைத் தந்தது.