வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (18/01/2018)

கடைசி தொடர்பு:15:07 (18/01/2018)

சினேகா கூட்டத்தில் சிக்கிய 108 ஆம்புலன்ஸ்!

தஞ்சாவூரில், டிபார்ட்மென்ட் ஸ்டோர் திறப்பு விழாவுக்கு வந்த நடிகை சினேகாவைப் பார்ப்பதற்கு கூட்டம் கூடியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக நோயாளியுடன் வந்த 108 ஆம்புலன்ஸ் செல்வதற்குத் தாமதம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில், இன்று டிபார்ட்மென்ட் ஸ்டோர் திறப்பு விழாவுக்கு நடிகை சினேகா வந்தார். அவரை காண்பதற்காக ஏராளமான கூட்டம் காலை முதலே கூடியது. சரியாக 10.45  மணியளவில் கடையைத் திறந்துவைத்த சினேகா, சாலை ஓரத்தில் போடப்பட்ட மேடையில் ஏறி,  "நான் முதல் முறையா இப்பதான் தஞ்சாவூருக்கு வருகிறேன். தஞ்சாவூரின் பெருமையை எல்லோரும் சொன்னார்கள். இங்கு வந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரொம்பத் தாமதாக வந்துள்ளதை நினைத்து வருந்துகிறேன்" என்றார்.

அப்போது அந்த வழியாக, உடல் நிலை முடியாத ஒருவரை ஏற்றிக்கொண்டு 108 ஆம்புலன்ஸ் வந்தது. சாலையை மறைத்தபடி கூட்டம் இருந்ததால் ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை. சுமார் 10 நிமிடங்கள் ஆம்புலன்ஸ் அங்கேயே நின்றது. காவலுக்கு நின்ற போலீஸார் கூட்டத்தை விலக்கிவிட முடியாமல் தவித்தனர். ஒரு வழியாக சமாளித்து வழிவிட்ட பின்னர் ஆம்புலன்ஸ் சென்றது. அதன்பிறகு, மேடையில் இருந்த சினேகா காரில் ஏறிச் சென்றார்.

சமூக ஆர்வலர் ஒருவர், "பிரபலமான ஒரு நடிகை வரும்போது கூட்டம் கூடுவது சகஜம். சாலையை மறிக்காத அளவுக்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்ட பிறகுதான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க