வீட்டு வாசலில் நின்ற இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்! சென்னையில் எஸ்.ஐ-யின் இரவு அடாவடி | Madipakkam sub inspector attacked yongster brutally

வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (18/01/2018)

கடைசி தொடர்பு:14:01 (18/01/2018)

வீட்டு வாசலில் நின்ற இன்ஜினீயருக்கு நேர்ந்த கொடூரம்! சென்னையில் எஸ்.ஐ-யின் இரவு அடாவடி

சென்னை மடிப்பாக்கத்தில், வீட்டு வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்த இளைஞர்களைத் தாக்கிய காவல் உதவி ஆய்வாளர், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

karthick

கார்த்திக்
 

சென்னை உள்ளகரம் மதியழகன் தெருவைச் சேர்ந்தவர், கார்த்திக். இவர், தனியார்  நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கார்த்திக் தனது வீட்டு வாசலில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த மடிப்பாக்கம் எஸ்.ஐ, அவர்களை வீட்டுக்குள் செல்லும்படி கூறிவிட்டு அங்கிருந்து ரோந்துப் பணியைத் தொடர்ந்தார். அவருடன் ஒரு காவலரும் இருந்திருக்கிறார். 

பின்னர், சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்வழியாக வந்த எஸ்.ஐ கார்த்திக் தன் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து வீட்டுக்குள் போகச் சொல்லி எச்சரித்துள்ளார். அதற்கு கார்த்திக் மற்றும் அவரின் தாய், ‘எங்க வீட்டுக்கு முன்னாடிதான நின்னு பேசிக்கிட்டிருக்கோம்’ என்று தன்மையாகக் கூற, `போகச் சொல்லியும் இங்கேயே நின்னு பேசுறீங்களா’ என்று எஸ்.ஐ கடுகடுத்துள்ளார்.  ஒருகட்டத்தில், எஸ்.ஐ ஒருமையில் திட்டத் தொடங்கினார். கார்த்திக்கை லத்தியால் தாக்கியுள்ளார். இதில், கார்த்திக் கையில் காயம் ஏற்பட்டது. 

எஸ்.ஐ-யிடம் கார்த்தி மற்றும் அவரின் தாயார் பேசும் காட்சியை அங்கு நின்றுகொண்டிருந்த கார்த்தியின் நண்பர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த வீடியோ வைரலாகி, இன்றுவரை அதிகம் பகிரப்பட்டுவருகிறது. இதுகுறித்து கார்த்தி தரப்பில் கூறுகையில், ‘வழக்கமா வேலைக்கு போகணும்னு சீக்கிரமே தூங்கிடுவோம். பொங்கல் விடுமுறைதானே... கொஞ்சநேரம் நண்பர்களோட பேசலாம்னு எங்க வீட்டு வாசலில் நின்று பேசினோம். அதுல மண்ணள்ளிப்  போட்டுட்டாங்க’ என்றனர்.


எஸ்.ஐ கடுமையாக நடந்துகொண்டதுகுறித்து கார்த்தியின் குடும்பத்தினர் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டரிடம் நேரடியாகப் புகார் தெரிவித்தனர். அங்கு, அவர்களின் புகாரை வாங்க மறுத்த இன்ஸ்பெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இளைஞர்களைத் தாக்கிய  எஸ்.ஐ, ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்துள்ளார். தற்போது அவர், ஆர்.கே.நகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க