வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (18/01/2018)

கடைசி தொடர்பு:16:55 (18/01/2018)

ஹஜ் யாத்திரை மானியம் ரத்து! ஆர்ப்பாட்டத்தில் மோடிக்கு எதிராகப் பொங்கிய காங்கிரஸ் கட்சியினர்

மத்தியில் ஆளும் பா.ஜ.க-வின் மோடி அரசைக் கண்டித்து, நாகை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இஸ்லாமிய பெருமக்களின் புனித ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்த மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  மாவட்டக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பண்ணை சொக்கலிங்கம் முன்னிலை வகிக்க, நகர காங்கிரஸ் தலைவர் செல்வம் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதில் பேசியவர்கள், ''ஜி.எஸ்.டி வரியைக் கொண்டு வந்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் முன்னுக்குக் கொண்டு செல்வேன் என்று கூறி ஆட்சிக்கு வந்த மோடி, ஜி.எஸ்.டி வரியைக் கொண்டுவந்து இந்தியாவை இருண்ட காலத்துக்குத் தள்ளியிருக்கிறார்.

இஸ்லாமியர்களை ஒடுக்க மதவாத அரசியலை இதுவரை மறைமுகமாக நடத்திக்கொண்டிருந்தவர்கள், ஹஜ் யாத்திரை மானியத்தை ரத்து செய்ததன் மூலம் வெளிப்படையாக இந்து மதவாதத்தைத் திணிக்கிறார்கள். இந்தியாவில் ஒற்றுமையாய் வாழ்கிற இந்து - முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்த மத்திய பி.ஜே.பி அரசு முயல்கிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உத்தரவின் பேரில் இந்தியா முழுவதிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். உடனடியாக முஸ்லிம் மக்களின் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை அளிக்காவிட்டால், ரயில் மறியல் போராட்டம் போன்ற பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்'' என்று எச்சரிப்பதாகப் பேசினார்கள். 

சேலம்

இதேபோல் சேலம் பழைய பேருந்து அருகே உள்ள தலைமை தபால் நிலையம் எதிரே சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தமிழ் மாநில தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டார்கள். கூட்டத்தில் பேசிய சேலம் புறநகர் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், ''இஸ்லாமி பெருமக்கள் புதிய பயணமாக மெக்காவுக்கு மேற்கொள்ளும் ஹஜ் பயணத்துக்கான மானியத்தை ரத்து செய்திருக்கிறார்  மத்தியில் ஆளும் மதவாத பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி. இதை சேலம் காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.

இந்த ஹஜ் பயணம் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து தொடந்து பல ஆண்டுகளாக மானியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஹஜ் மானியத்தை நிறுத்தி, சிறுபான்மை மக்களுக்கு சிரமத்தையும், தொல்லையும் ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே பலிவாங்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு குறி வைத்து இத்தாக்குதலை தொடுத்துள்ளது. அதேபோல ஹஜ் பயணம் செல்லும் எண்ணிக்கையும் குறைத்துள்ள இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதோடு, எப்போதும் போல தொடர்ந்து ஹஜ் புனித பயணத்துக்கான மானியத்தை வழங்கிட வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க