நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை! கணவனைத் தெறிக்கவிட்ட மக்கள் | Women brutally killed by his husband

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (18/01/2018)

கடைசி தொடர்பு:13:31 (19/01/2018)

நடுரோட்டில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை! கணவனைத் தெறிக்கவிட்ட மக்கள்

கொலை

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடுரோட்டில் மனைவியைக் கணவனே கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.

நீடாமங்கலம், பெரம்பூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். மெக்கானிக். இவரின் மனைவி சுமதி. இவர்கள் இருவரும் இன்றுகாலை பொருள்கள் வாங்குவதற்காக நீடாமங்கலத்துக்கு வந்தனர். அண்ணாசிலை அருகே வரும்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தர்மராஜ், கத்தியை எடுத்து சுமதியின் கழுத்தை அறுத்தார். இதனால் நிலைதடுமாறிய சுமதி, நடுரோட்டில் அங்கும் இங்கும் ஓட முயன்றார். ஆனால், தர்மராஜ், விடாமல் கொடூரமாகச் சுமதியின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டார்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தர்மராஜைப் பிடிக்க சிலர் முயற்சி செய்தனர். ரத்தம் படிந்த கத்தியுடன் நின்றுகொண்டிருந்த தர்மராஜை பொது மக்கள் மடக்கிப் பிடித்தனர். அங்குள்ள அண்ணாசிலை அருகில் உள்ள கம்பத்தில் அவரைக் கட்டிவைத்துவிட்டு நீடாமங்கலம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சுமதியின் உடலைக் கைப்பற்றினர். தர்மராஜையும் விசாரணைக்காகப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "தர்மராஜுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. முதல் மனைவியைப் பிரிந்து அவர் வாழ்ந்தார். பூவனூரைச் சேர்ந்த சுமதியை இரண்டாவதாகத் தர்மராஜ் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மதுப்பழக்கத்துக்கு அடிமையான தர்மராஜ், சரிவர வேலைக்குச் செல்வதில்லை. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். நீடாமங்கலத்துக்கு இருவரும் வந்தபோது ஏற்பட்ட தகராறில் நடுரோட்டில் வைத்தே சுமதியைக் கத்தியால் அறுத்துக் கொன்றுள்ளார் தர்மராஜ். அவரைக் கைது செய்து விசாரித்துவருகிறோம்" என்றனர்.