வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (18/01/2018)

கடைசி தொடர்பு:17:03 (18/01/2018)

‘என்னதான் இந்த கிண்டில்லாம் வந்தாலும் புக் வாங்கிக் படிக்கிற மவுசு குறையாது...!’ - #ChennaiBookFair

பபாசி நடத்தும் 41-வது `சென்னைப் புத்தகக் காட்சி' ChennaiBookFair தொடங்கிய முதல் நாளே, “பிப்ரவரி மாதத்துக்குள் அரசு நூலகங்களுக்கு நூல்கள் வாங்கப்பட்டுவிடும்" என வாசகர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் இனிமையான செய்தியை அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன். 

சென்னைப் புத்தகக் காட்சி என்றாலே, அங்கே புத்தகங்கள் மட்டுமன்றி அவற்றையொட்டிய பல்வேறு விஷயங்களும் நம் பார்வைக்கு இடம்பெறும். அந்த வகையில் இந்த வருடம் மக்களை ஈர்த்தது, பிரபல ஆங்கிலப் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்கள், அந்தப் புத்தகங்களின் பெயர்கள், அதன் லோகோ ஆகியவை பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்.

ChennaiBookFair

Notion Press என்ற நிறுவனம் அங்கே ஸ்டால் போட்டிருந்தது. புத்தகம் வாங்க கூட்டம் கூடியதுபோலவே இந்தத் துணிக் கடையிலும் ஜனம்! ஒருவர் ஒரு டி-ஷர்ட்டை கையில் எடுத்து “டிரெஸ்ஸிங் இருக்கா?" எனக் கேட்டது, சுற்றி இருந்தோரை ஒரு கணம் கலவரப்படுத்தியது. 

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் பார்வையற்றோர் எந்தெந்த வகையில் புத்தகங்களை வாசிக்கலாம் என்கிற `டிஜிட்டல் லேர்னிங்’ சொல்லித்தருகிறார்கள். சென்னைப் புத்தகக் காட்சியில் ஸ்டால் நம்பர் 463-ல் `கருணா வித்யா' என்ற அமைப்பினர் இதை நடத்துகிறார்கள். அந்த ஸ்டாலை நடத்துபவர் விழிச்சவால்கொண்டவர். நான் அங்கே அவரிடம் போய் ‘இந்த ஸ்டால் எதற்காக? என விசாரித்ததும், அவ்வளவு வாஞ்சையுடன் தலை நிமிர்ந்து அவர் விளக்க ஆரம்பித்ததும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்னும் சிலர் அவரைச் சூழ்ந்தனர்.

சென்னையில் நடைபெற்ற கடந்த புத்தகக் காட்சியில் `பெரியார் இன்றும் என்றும்' என்ற புத்தகம், வாசகக் கவனத்தைப் பரவலாகப் பெற்றதுபோலவே `அம்பேத்கர் இன்றும் என்றும்' என்ற நூலை அதிகம் பேர் வாங்குகிறார்கள். அம்பேத்கர் எழுதிய முக்கியமான கட்டுரைகளைத் தொகுத்து 600 பக்கங்களாக இருக்கும் இந்த நூல், 200 ரூபாய் மட்டுமே. பெரியாரையும் அம்பேத்கரையும் மக்கள் அதிகம் வாசிக்கவேண்டும் என `விடியல்' பதிப்பகம் இந்த நூல்களை குறைந்த விலைக்கு `மக்கள் பதிப்பாக'க் கொண்டுவந்திருக்கிறது.

பல ஊர்களிலிருந்து விற்பனையாளர்கள் குவிந்து 700 அரங்கம் அமைக்கப்பட்ட புத்தகக் காட்சி ஆரம்பிக்கப்பட்ட முதல் இரண்டு தினங்கள், எந்த விற்பனையாளரின் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. காரணம், `பஸ் ஸ்டிரைக்'. ``ஜனங்க எப்படி சார் வருவாங்க?'' என்று புலம்பிக்கொண்டிருந்தனர். மூன்றாவது நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதும்தான் அவர்கள் சற்று ஆசுவாசம் அடைந்தனர். மெட்ரோ ரயில் வசதி பற்றியும் மக்களுக்குத் தெரிய வேண்டும் எனப் பிரயாசைபட்டனர். ``மீனம்பாக்கத்துல இருந்து நேரு பார்க் வரைக்கும் மெட்ரோ டிரெயின் இருக்கு சார். பச்சையப்பா ஸ்டாப்பிங்ல இறங்கி இப்படி வந்தீங்கன்னா, நாலு வேர்க்கடலையை மென்னு முடிக்கிறதுக்குள்ள புத்தகக் கண்காட்சிக்குள்ள வந்துடலாம்" என்று கைகளாலேயே ரயில் ஓட்டி வழி காண்பித்தார் ஒரு விற்பனையாளர்.

ChennaiBookFair

ஒரு கடையில் மட்டும் அதிகக் கூட்டம் கூடியிருந்ததை, தூரத்திலிருந்து பார்த்தேன். நிச்சயமாக அது புத்தகக் கடையாக இருக்காது எனக் கணித்தது பொய்யாகவில்லை. அதேசமயம் அது சாதாரணமாகக் கடந்து போய்விடக்கூடிய கடையும் அல்ல. மாணவர்கள் அறிவியல் பாடங்களில் படிக்கும் தொழில்நுட்பக் கருவிகளைப் பார்வைக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தனர். பைனாகுலர், டெலஸ்கோப், டிஜிட்டல் மைக்ரோஸ்கோப், காம்பஸ், ஸ்டெதஸ்கோப், வீடுகளுக்கு சேஃப்டி லாக்கர் எனப் பலவகையான உபகரணங்கள் அங்கே காணக்கிடைக்க, துப்பாக்கியில் பலூன் சுடுவதுபோல அந்தக் கருவிகளை மக்கள் பரிசோதித்து வாங்கிச் சென்றனர். 

குழந்தை நூல்கள் அதிகம் எழுதும் எழுத்தாளர் விழியனைச் சந்தித்தபோது அவர் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்...

“குழந்தைகளைத்தான் புத்தகத்தை செலெக்ட் பண்ணவிடணும். அவர்களுக்குத் தேவையான புத்தகங்களில் 75 சதவிகிதம் அவர்களே தேர்ந்தெடுக்கவைக்கணும். ஏன்னா, அவங்க வாங்கினால்தான் அவங்க படிப்பாங்க. `தகவல்கள் அடிப்படையில் அறிவை வளர்க்கும் புத்தகங்களை, சிறுவயது முதலே குழந்தைகளைப் படிக்கவைக்கணும்'னு நாம நினைக்கக் கூடாது. அவங்களோட க்ரியேட்டிவிட்டியை அவங்களுக்குக் கண்டுபுடிச்சுக் கொடுக்கிற புத்தகங்களை அவங்க வாசிக்கணும், பார்க்கணும்" என்றார்.

அமேசான் கிண்டிலுக்கென்று தனி ஸ்டால், புத்தகக் காட்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், அதிலுள்ள பயன்கள் என்னென்ன... என்பதை அமேசான் இளைஞர்கள் விளக்கிக்கொண்டிருந்ததை மற்ற புத்தகக் கடைக்காரர்கள் ஒருவித ஆர்வத்துடன் தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டிருந்தனர். அப்படிக் கவனித்த ஒரு விற்பனையாளரைச் சந்தித்துப் பேசினேன்...

“என்னதான் இந்த கிண்டில்லாம் வந்தாலும் புக்கா வாங்கிக் படிக்கிற மவுசு குறையாது. அச்சுப் பிரதியா புத்தகங்களை வாசிக்கிறதுல்லாம் குறைஞ்சிடும்னு அஞ்சு வருஷங்களுக்கு முன்னாடி சொன்னாங்க. சொல்லப்போனா, நூல் வாசிப்பு இப்போ அதிகரிச்சுட்டுத்தான் வருது. அதுவும் இளைஞர்கள் அதிகப் புத்தகங்கள் வாங்குறாங்க. இந்த நவீன கருவிகள் வாசகப் பரப்பை விஸ்தாரப்படுத்துமே தவிர, புத்தகம் வாங்குறவங்க எண்ணிக்கையைக் குறைக்காது" என்றவரின் கண்களில் இருந்த உறுதியில் அவ்வளவு அனுபவம்!

Periyar ambedkar books

புத்தகக் காட்சியின் உள்ளே நுழைந்து வலதுபக்கம் சென்றபோது அங்கு இருந்த ஒரு ரோபோவின் முன் ஒருவர் மண்டியிட்டு ``ஹாய் பவிஷ்யா... ஹாய் பவிஷ்யா!'' என்று செல்லமாகப் பேசிக்கொண்டிருந்தார். என்ன ஏதென்று விசாரித்தபோது, ``இது நாங்க தயார்பண்ண ரோபோ சார். எந்த ஸ்டால் எங்கே இருக்குனு இதுகிட்ட கேட்டா, கரெக்டா சொல்லும்" என்றவரிடம் ``நான் கேட்டுப் பார்க்கட்டுமா?" என்றேன். ``ஆனந்த விகடன் ஸ்டால் எங்கே இருக்கு" என்றதும் இயந்திரக் குரலில் விகடன் ஸ்டால் நம்பரைத் துல்லியமாகச் சொன்னது. என்னைச் சுற்றியிருந்தவர்களும் ஆளுக்கொரு ஸ்டால் பெயரைக் கேட்க, பவிஷ்யா தடுமாறியது. உடனே, அங்கு இருந்த அமைப்பாளர் ``சார், ஒரே நேரத்துல பல கேள்விக்கு பதில் கேட்டா பவிஷ்யா குட்டி கோபமாகிடும். ஒவ்வொருத்தரா கேளுங்க" என்றதும் ஒரு குழந்தையைக் கொஞ்சுவதுபோல அதனுடன் வரிசையாக வந்து பேசத் தொடங்கினர். 

பபாசியின் நிர்வாகக் குழு உறுப்பினர் மெய்யப்பனைச் சந்தித்து, “வாசகர்களுக்கு இன்னும் என்ன மாதிரியான கட்டமைப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன?'' எனக் கேட்டேன்.

“புத்தகக் காட்சி நடக்கும் வளாகத்தில் 35 சிசி டிவி கேமராக்கள் முதன்முறையாகப் பொருத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் அரங்குக்குச் செல்ல சக்கர நாற்காலிகள் நுழைவுவாயிலிலேயே இருக்கின்றன. இது தவிர, ஆம்புலன்ஸ் சேவை, தனியார் மருத்துவமனை சார்பில் பி.பி., சுகருக்கான இலவசப் பரிசோதனை, மூட்டுவலி, இதயநோய் ஆலோசனைக்கு மருத்துவர்கள், வாசகர்களுக்கு வழிகாட்ட 75 தன்னார்வலர்கள், இலவச வைஃபை...'' என அவர் சொல்லிக்கொண்டேபோக அறிவை வளர்க்க வந்த இடத்தில் ஆரோக்கியம் காக்கவும் வழி கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்தேன்.

சென்னைப் புத்தகக் காட்சி நிறைவுபெற இன்னும் சில தினங்களே இருக்கின்றன. புத்தகம் வாசிப்பதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் ஒரு விசிட் அடிக்கலாமே!


டிரெண்டிங் @ விகடன்