`திருப்புவனம் எஸ்.ஐ-யை உடனே பணிநீக்கம் செய்க' - கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி மீது போலீஸ் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் 80-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டார்கள்.

இதில் பேசிய சேலம் மாவட்டக் குழு செயலாளர் ராமமூர்த்தி, ''எங்க கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் கந்தசாமி திருப்புவனம் வாரச்சந்தையில் தனது வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு காய்கறி வியாபாரம் செய்கிறவர்களைக் காவல் உதவி ஆய்வாளர் திருமுருகன், சங்கர், நந்தகுமார், ராஜா ஆகியோர் அடித்து உதைத்து காய்கறிக் கடைகளைச் சாலையில் வீசியிருக்கின்றனர்.

காவல்துறையிடம் ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கந்தசாமி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், அவரை இழிவாக வசைபாடிக்கொண்டு கந்தசாமியின் கையைப் பின்பக்கம் கட்டி ஆட்டோவில் குண்டுகட்டாகத் தூக்கிப்போட்டு திருப்புவனம் காவல்நிலையம் கொண்டு சென்றுள்ளனர். பின்னர், காவல்நிலையத்தின் மேல் மாடிக்குக் கொண்டுசென்று கழிப்பறை அருகே வேஷ்டி, சட்டையைக் கழற்றிவிட்டு சுவரில் சாய வைத்து இரு கைகளையும் இரு போலீஸார் பிடித்துக்கொள்ள கடுமையாக லத்திக் கம்பால் தாக்கிய அட்டூழியத்தையும் கொலைவெறித் தாக்குதலையும் அரங்கேற்றியுள்ளனர். ஆகவே, மாவட்டச் செயலாளர் கந்தசாமி மீது தாக்குதல் நடத்திய திருப்புவனம் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு அவர்களை உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!