“திவாகரனுக்குச் சொல்ல என்னிடம் ஒன்றுண்டு!” - நாஞ்சில் சம்பத் | Reaction of Nanjil Sampath for Diwakaran's speech about Jayalalithaa's death

வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (18/01/2018)

கடைசி தொடர்பு:18:24 (18/01/2018)

“திவாகரனுக்குச் சொல்ல என்னிடம் ஒன்றுண்டு!” - நாஞ்சில் சம்பத்

திவாகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையிலும் அவரின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் சந்தேகங்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஒவ்வொரு நாளும் புதுப்புது சர்ச்சைகளும், தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று, 'ஜெயலலிதா, 2016 டிசம்பர் 4-ம் தேதி மாலையே இறந்து விட்டார்' எனக் கூறி புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். 75 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு, மாரடைப்பால் ஜெயலலிதா மரணமடைந்ததாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அதே ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவித்தது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்த நாள்களில் சசிகலாவைத் தவிர, வேறு யாருக்கும் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை. 'ஜெயலலிதா நலமாக உள்ளார்; இட்லி சாப்பிட்டார்; ஜூஸ் அருந்தினார்' போன்ற தகவல்கள் மட்டும் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மூலம் பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் சொல்லப்பட்டு வந்தன.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி, “ஜெயலலிதா குணமடைந்து விட்டார்; அவர் எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பேட்டியளித்தார். இதுபோன்ற அடுத்தடுத்த தகவல்கள், தமிழக மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின. அதன்பின்னர், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அதுபற்றி விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது தமிழக அரசு. நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனின் தலைவராக நியமிக்கப்பட்டு, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தையநாள், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது, ஜூஸ் அருந்தும் காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்றை, டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அது, தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க நிர்வாகிகளுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ காட்சிகளின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், சசிகலாவின் சகோதரர் திவாகரன், மன்னார்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் பேசுகையில், "ஜெயலலிதா 2016 டிசர்பர் 4-ம் தேதியே இறந்து விட்டார். ஆனால், அப்போலோ மருத்துவமனையின் பாதுகாப்புக்காக ஒருநாள் தாமதமாக, டாக்டர்கள் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய அறிவிப்பை அடுத்தநாள் அதாவது டிசம்பர் 5-ம் தேதி அன்று அறிவித்தனர்" என்றார். திவாகரனின் இந்தப் பேச்சு மக்களிடையே குழப்பத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 

திவாகரனின் பேச்சு குறித்து தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம். “அம்மாவின் மரணத்தைச் நாஞ்சில் சம்பத்சர்ச்சைக்குள்ளாக்குவதோ, விவாதப் பொருளாக்குவதோ, 'மரணத்தில் மர்மம் இருக்கிறது' என்று சொல்வதிலோ எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. ஒருவரின் மரணத்தைவைத்து அரசியல் நடத்துகிற ஈனத்தனமான போக்கினை, தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. இந்நிலையில், நான் அதிகம் மதிக்கின்ற திவாகரன், ஒரு கல்லூரியின் தாளாளர்; டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. இதனால், அவருக்கு எந்த ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், அவர் சொன்ன கருத்தால், அ.தி.மு.க-வினரின் மனங்களில் வருத்தமும், சோகமும் நிழலாடுவதை நான் பார்க்கிறேன். இதை திவாகரன் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். இல்லையென்றால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் முன் அவர் இதைச் சொல்வதற்கு முழு உரிமையும் இருக்கிறது. அங்கு அவர் சொல்லியிருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. அப்போலோ மருத்துவர்கள் சொன்னதைத்தான் நான் நம்புகிறேன்" என்றார் அவர்.

'மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா, உடல் நலம் தேறி வருகிறார்' என்பதை மக்கள் நம்புவதற்கு அப்போது முக்கியக் காரணமாகசி.ஆர்.சரஸ்வதி இருந்தவர் தினகரனின் மற்றொரு ஆதரவாளரும், அ.தி.மு.க-வின் செய்தித்தொடர்பாளராக இருந்தவருமான சி.ஆர்.சரஸ்வதி. "அம்மா நலமாக உள்ளார்; சர்க்கரை பொங்கல் சாப்பிட்டார்" போன்ற தகவல்களை பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர். திவாகரன் பேசியிருப்பது குறித்து சி.ஆர்.சரஸ்வதியிடம் கேட்டபோது, "நீதி விசாரணையில் இருக்கும்போது அதைப் பற்றி இப்போது எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. திவாகரன் அண்ணனும், அவர் பேசியது குறித்து விளக்கமளித்துள்ளார். அப்போலோ மருத்துவமனையும் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனால், அதுபற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் தொடர்பாக, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு நீதிபதி விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார். எனவே, ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்கள் இன்னும் விலகவில்லை. தினகரன் தரப்பிலிருந்து மட்டுமே புதுப்புது சர்ச்சைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 

ஒரு முன்னாள் முதல்வர் மற்றும் தங்கள் கட்சியின் தலைவியின் மரணத்தில் கூறப்படும் சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டிய தமிழக அரசு, தொடர்ந்து அமைதி காத்துவருகிறது. அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தினகரன் ஆதரவாளர்களுக்குத் தெரிந்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால் ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் முற்றிலும் விலக வாய்ப்புள்ளது. இதைத் தீர விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்