வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (18/01/2018)

கடைசி தொடர்பு:17:10 (09/07/2018)

பழுதடைந்த கடலோரக் காவல்படை ரோந்து வாகனம்...கொடி கட்டிப்பறக்கும் கடத்தல்!

கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்க வேண்டிய பாதுகாப்புப் பிரிவினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால், சட்டத்துக்குப் புறம்பாக இந்தியாவுக்கும் - இலங்கைக்கும் இடையே கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன.

கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வழங்கப்பட்ட ரோந்து வாகனம்


தமிழகத்தின் கடற்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதியைக் கொண்டிருப்பது ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளாகும். இவற்றுடன் இலங்கைக் கடற்பகுதி இணைவதால் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக வங்கக் கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள், சமூக விரோதிகள், அந்நிய நாட்டு ஊடுருவல்கள், சட்ட விரோதக் கடத்தல் சம்பவங்கள் போன்றவை எளிதில் நடக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

 இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்கி வந்தபோது அவர்கள் இந்தியக் கடல் பகுதியில் ஊடுருவாமல் இருக்கவும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உதவிகள் கிடைப்பதை தடுக்கவும் மத்திய மாநில அரசுகளைச் சேர்ந்த பல்வேறு பாதுகாப்புப் பிரிவுகள் ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டன. விடுதலைப்புலிகள் அமைப்பின் அழிவுக்குப் பின் மாவட்டத்தில் இயங்கும் பாதுகாப்புப் பிரிவுகளும் பலகீனமாகி விட்டன.

குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட 'க்யூ' பிரிவு, கடலோரப் பாதுகாப்புக் குழுமம், சுங்கத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவுகள் பெயரளவிலேயே இயங்கிவருகின்றன. குறிப்பாக ராமேஸ்வரத்தில் இயங்கி வந்த க்யூ பிரிவு முழுவதும் காலியாகி அதன் அலுவலகம் மட்டுமே தற்போது தனியார் தங்கும் விடுதி ஒன்றில் அடையாளமாக இருந்து வருகிறது.

இதேபோல் கடலோரப் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமப் பிரிவும் ஏனோ தானோ என உள்ளது. கடலோர மணல் பகுதிகளில் சென்று ஊடுருவல் மற்றும் கடத்தல்களைத் தடுக்க வழங்கப்பட்ட விரைவுப் படகுகள், மணலில் செல்லக் கூடிய நவீன வாகனங்கள் எல்லாம் பழுதான நிலையில் தேவிப்பட்டினம், அரியமான், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய கடலோரப் பகுதிகளில் புதைந்து கிடக்கின்றன. இதைவிட கொடுமை கடலோரப் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் சிலரே கடத்தலுக்கு உடந்தையாக இருந்து வருவது.

இதன் விளைவாக ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளின் வழியாக இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளும், இந்தியாவிலிருந்து கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்களும், போதை மாத்திரைகள், பீடி பண்டல்கள், ரசாயனப் பொடிகள் ஆகியன கடத்தப்படுவது தொடர்ச்சியாக நடந்துவருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒற்றை இலக்கத்திலான கடத்தல் சம்பவங்களே பிடிபட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றை வெளிமாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினரே பிடித்துள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன், கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு  இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொள்ளும் மீனவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.