பண மோசடி விவகாரம்..! நடிகையிடம் சைபர் க்ரைம் போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணை!

நடிகை ஸ்ருதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சாஃப்ட்வேர் இன்ஜினீயர்கள் பலரை ஏமாற்றி பணம் பறித்த நடிகை ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தாரை ஒருவாரம் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கோவை சைபர் க்ரைம் போலீஸார் ஸ்ருதி உள்ளிட்ட நான்கு பேரிடம் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

ஜெர்மனியில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக வேலைபார்த்துவரும் சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நடிகை ஸ்ருதி (இவர் நடித்த ஆடி போனா ஆவணி, சோழவம்சம் ஆகிய இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை) மற்றும் அவர் அம்மா சித்ரா, தம்பி சுபாஷ், அப்பா பிரசன்ன வெங்கடேஷ் (சித்ராவின் இரண்டாவது கணவர்) ஆகிய நான்குபேரை கோவை சைபர் க்ரைம் 
போலீஸார் கடந்த 11-ம் தேதி கைதுசெய்யப்பட்டு உடனடியாக  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தார் பாலமுருகன் மட்டுமல்லாது பாலமுருகனைப் போல பல இளைஞர்களை மேட்ரிமோனியல் வெப்சைட்கள் மூலம் தொடர்புகொண்டு, திருமணம் செய்துகொள்வதாகக் கூறி  பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. கோடிக்கணக்கில் மோசடி செய்த பணத்தையெல்லாம் எங்கே பதுக்கி வைத்திருக்கிறார்கள். மொத்தம் இப்படி எத்தனைபேரை ஏமாற்றியுள்ளார்கள்? போன்ற தகவல்கள் போலீஸுக்குப் புதிராக இருக்கிறது. அவர்களிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஸ்ருதி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரசன்ன வெங்கடேஷ், சித்ரா, சுபாஷ் ஆகிய நான்குபேரையும்  காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி கோவை மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். 

வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச்சாமி,  நான்குபேரையும் ஏழு நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து 25-ம் தேதி, மாலை 5 மணிக்கு நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து நடிகை ஸ்ருதி உள்ளிட்ட நான்கு பேரையும் அழைத்துசென்ற சைபர் க்ரைம் போலீஸார் அவர்களிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!