வெளியிடப்பட்ட நேரம்: 10:01 (19/01/2018)

கடைசி தொடர்பு:10:46 (19/01/2018)

`குட்டி யானை' ஓட்டுநர் - உரிமையாளர்களின் போராட்டம்!- பரபரத்த புதுக்கோட்டை


"போலீஸ், எங்களுடைய ஓட்டுநர் உரிமத்தைப் பறித்துக்கொண்டு பல வாரங்களாக அலைக்கழிப்பதால், வண்டி ஓட்டமுடியாமல் தவிக்கிறோம். தொழில் பார்க்கமுடியாமல் தவிக்கிறோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. போலீஸாரின் இந்தச் செயலைக் கண்டித்துதான் இந்தப் போராட்டம்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்கள் சரக்கு வண்டி ஓட்டுநர்கள்.

'குட்டியானை' என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் டாடா ஏஸ் (TSTA ACE) வாகனத்தின் உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் இணைந்து இன்று புதுக்கோட்டை தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200 வண்டிகளை மைதானத்தில் நிறுத்தி வைத்து, அதற்கு முன்பாக திரண்டு அமர்ந்த உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் போலீஸுக்கு எதிராக கோசம் எழுப்பினார்கள். இவர்களது பிரச்னை கொஞ்சம் வித்தியாசமானது. அது என்ன என்பதை போராட்டத்தில் கலந்துகொண்ட அப்பாஸ் என்ற இளைஞர் நம்மிடம் விவரித்தார். "புதுக்கோட்டையிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு அதாவது, காரைக்குடி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற ஊர்களுக்கு நாங்கள்  எங்கள் வண்டிகளில் லோடு ஏற்றிக்கொண்டு செல்லும் போதோ, வரும்போதோ அந்த மாவட்ட போலீஸ் எங்களை நிறுத்துவார்கள். அப்போது அனுமதிக்கபட்டதற்கு அதிகமாக லோடு ஏற்றிக்கொண்டு செல்வதாக கேஸ் போடுவார்கள். கூடவே ஸ்பாட் பைன் வசூலிப்பார்கள். அல்லது, இரண்டு பேருக்கு மேல் முகப்பில் உட்கார்ந்து சென்றால், அதற்கு பைன் போட்டு ரசீது தருவார்கள். அதுவரைக்கும் ஓகே. ஆனால், எங்களது ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸை வாங்கி வைத்துக்கொண்டு, 'புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. வுக்கு அனுப்பி விடுகிறோம். அங்கே போய் வாங்கிக்க'  என்பார்கள். அபராதத்தையும் கட்டிட்டு, லைசென்ஸையும் பறிக்கொடுத்துட்டு, இங்கே வந்து ஆர்.டி. ஓ. ஆபீசுக்கு வாரக்கணக்குல அலைவோம். அங்கே 'லைசென்ஸ் இன்னும் வரவில்லை' என்பார்கள். ஒருமாதம் கழித்துதான் எங்களிடமிருந்து வாங்கிய லைசென்ஸை அனுப்புவார்கள். அதுவரை பொழப்புப் பார்க்க முடியாது. லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால், மூன்று வருடங்களுக்கு எங்கள் லைசென்ஸ் உரிமத்தை ரத்து செய்துவிடுவார்கள். உள்ளூரில்கூட நாங்கள் வண்டி எடுக்கமுடியாது. அதுபோல, குட்டி யானையில் ஆட்களை ஏற்றிக்கொண்டுப் போக முடியாது. நாங்கள் லோடை இறக்குவதற்காக மூன்று லோடுமேனை ஏற்றிச்சென்றால் கூட, போலீஸ் லைசென்ஸை பிடுங்கி வைத்துக்கொள்கிறது. எங்களால் நிம்மதியாக தொழிலைப் பார்க்க முடியவில்லை" என்று ஒரே மூச்சில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை விவரித்தார். போராட்டம் முடிந்ததும் எல்லோரும் தங்களது வண்டிகளை எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக ஆர்.டி.ஓ.அலுவலகத்துக்குச் சென்று, கோரிக்கை மனுவைக் கொடுத்துவிட்டு வந்தார்கள்.