`தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்!' - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேச்சு

டெல்லியில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்ஸஸ் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் பயின்று வந்த திருப்பூர் மாணவர் சரத்பிரபு, விடுதி கழிவறையில் மர்மமான முறையில் மரணமடைந்து கிடந்த செய்தி தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சரத் பிரபுவின் உடல் நேற்று இரவு 11:30 மணி அளவில் அவரது சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதிக்கு வந்து சேர்ந்தது. இன்று காலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு சார்பில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், `டெல்லி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் மரணமடைந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இன்று காலை டெல்லியில் இருந்த தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வத்தை அழைத்து, சரத்பிரபுவின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்துகொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.

அதனடிப்படையில் பன்னீர்செல்வமும் அங்கு நேரில் சென்று சரத்பிரபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை ஏற்பாடு செய்தார். இந்த மாவட்டத்தின் அமைச்சர் என்ற முறையில் நானும், திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போது நேரில் வந்து இரங்கலை தெரிவித்துக்கொண்டோம். அப்போது சரத்பிரபுவின் பெற்றோர் பல்வேறு கருத்துகளை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவை அனைத்தையும் முதல்வரிடத்தில் எடுத்துக்கூறி, இனி வெளி மாநிலங்களுக்கு கல்வி கற்கச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற வகையில் நடவடிக்கை எடுப்போம். சரத் பிரபுவின் மரணத்தையொட்டி அங்கே என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்பதைப் பற்றியும், விரிவாகக் கேட்டு வருமாறு முதல்வர் என்னிடத்தில் கூறியிருக்கிறார். எனவே, அவருடன் கலந்துபேசி, இனி என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை விரைவில் முடிவு செய்வோம். மேலும் இந்த பிரச்னை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, மத்திய அரசிடம் அனைத்து வகையிலும் முதல்வர் வலியுறுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!