வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (19/01/2018)

கடைசி தொடர்பு:14:32 (19/01/2018)

`நானும் வரமாட்டேன்; நீயும் வரக்கூடாது' - மல்லுக்கட்டும் விஜயபாஸ்கரும் எம்.எல்.ஏ-வும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதிக்கும் இடையேயான போட்டி களைகட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுவருகிறார். அத்துடன், மாவட்டம் முழுக்க பயணித்து, பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதே பாணியில் அறந்தாங்கி எம்.எல்.ஏ, தனது தொகுதிக்குட்பட்ட நகரம், கிராமங்களுக்குச் சென்று, அந்தப்பகுதி வட்டாட்சியர், கோட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்கள் புடைசூழ, மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். எந்த வருடமும் இல்லாத வேகம் இந்த முறை ரத்தினசபாபதியிடம் இருப்பதைக் கண்டு, கட்சிக்காரர்களே திகைத்துப்போகிறார்கள்.

"அண்ணனை புதுக்கோட்டை மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து, எடப்பாடியும் ஓ.பி.எஸ்ஸும் நீக்கியதிலிருந்து, அண்ணன் ரொம்ப ஆக்டிவ் ஆயிட்டாரு. அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்கள் பிரச்னைகளில் தலையிட்டு, அதை சரி செய்யுறாரு.பொது கூட்டங்கள் நடத்தும்போது, மக்கள் ஏதாவது புகார் மனு கொடுத்தா, அதை அந்தப் பகுதியிலுள்ள தாசில்தார், கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடுகிறார்" என்கிறார்கள் ரத்தினசபாபதி ஆதரவாளர்கள்.

விஜயபாஸ்கர் அமைச்சர் என்பதால், மாவட்டம் முழுக்க ரவுண்டுகட்டி அடிக்கிறார். அவரது சில செயல்பாடுகளை மக்கள் மனம் லயித்துப் பாராட்டவும் செய்கிறார்கள். அப்படியான சம்பவம் ஒன்று கடந்த வாரம் சித்தன்னவாசலில் நடந்தது. அங்கு பொங்கல் விழாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தியது. மாலை தொடங்கிய அந்த விழாவில், இரவு மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. தமிழர்களின் பாரம்பர்யத்தை உணர்த்தும் விதமாக நடந்த அந்த நிகழ்ச்சியால் ஈர்க்கப்பட்ட அமைச்சர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். அதைப் பார்த்த மக்கள்,"மினிஸ்டர்னு கெத்துக்காட்டாம சின்னபுள்ளையாட்டம் எப்படி ஆர்வமா படம் புடிக்கறாரு பாரேன்" என்று பாராட்டினார்கள்.

மக்கள் நலன் சார்ந்த விழாக்களில் கலந்துகொள்வதில் தீவிரம் காட்டும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனக்கு மிகவும் பிடித்த ஜல்லிக்கட்டு விழாக்களிலும் தனிஆர்வமுடன் கலந்துகொள்கிறார். "புதுக்கோட்டைன்னாலே தமிழ்நாட்டு மக்களுக்கு சட்டுபுட்டுனு நினைவுக்கு வர்றது அண்ணன் விஜயபாஸ்கர்தான். அந்த அளவுக்கு தனிநபராக இந்த மாவட்டத்துக்கு புகழ் சேர்த்துக் கொடுத்திருக்கிறார். அவரை மிஞ்ச இந்த மாவட்டத்தில் யார் முயற்சி பண்ணினாலும் அது நடக்காது. இதுவரை இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்து சாதிக்காத விசயங்களை அண்ணன்தான் சாதித்து வருகிறார். அண்ணன் புகழைக் காலத்துக்கும் சொல்ல, நரிமேடு பகுதியில் கட்டிவரும் 1,920 தொகுப்பு வீடுகளே போதும்ணே" என்று பரவசப்பட்டார்கள்.

‎இதில் மற்றொரு வேடிக்கையான விஷயம் ஒன்றும் இருப்பதை நுட்பமான  நபர்கள் நமுட்டு சிரிப்புடன் சுட்டிக்காட்டுகிறார்கள். என்ன அது. `இது என்னோட ஏரியா. அது உன்னோட ஏரியா. என் ஏரியாவைவிட்டு நானும் வரமாட்டேன். உன் ஏரியாவைவிட்டு நீயும் வரக்கூடாது'னு 'கைப்புள்ள' வடிவேலு சொல்ற மாதிரி, அறந்தாங்கி நகரத்துக்கு அமைச்சரும் புதுக்கோட்டை நகருக்குள்ள எம்.எல்.ஏ-வும் என்ட்ரி ஆகமாட்டாங்க" என்றார்கள்.

எது எப்படியோ, விஜயபாஸ்கருக்கும் ரத்தின சபாபதிக்கும் இடையே நடந்துவரும் இந்த மறைமுக 'நீயா?நானா?'போட்டியால் புதுக்கோட்டை அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.