வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (19/01/2018)

கடைசி தொடர்பு:12:40 (19/01/2018)

100 அடி கிணற்றில் விழுந்த ஆக்ரோஷமான மாட்டுக்கு நடந்த சோகம்!

 

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள துரைராஜபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் விழுந்த காட்டுமாட்டை தவறான முறையில் மீட்டதால், அது பரிதாபமாக உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று காலை 7 மணியளவில் போடி அருகே உள்ள துரைராஜபுரம் பகுதியில் இருக்கும் விவசாயக் கிணறு ஒன்றில் ஐந்து வயது மதிக்கத்தக்க காட்டு மாடு ஒன்று விழுந்துவிட்டதாக வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. அந்தப் பகுதியில் சில நாள்களாகவே காட்டு மாடு சுற்றித்திரிந்ததாகவும், சம்பவத்தன்று காலை, மனித நடமாட்டத்தைக் கண்டு அஞ்சி ஓடும்போது கிணற்றுக்குள் தவறி விழுந்ததாகவும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்க்கும்போது, 100 அடி கிணற்றில் 25 அடி தண்ணீரில் காட்டுமாடு தத்தளித்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். பெரும்பாலும் ஒரு மாடு கிணற்றுக்குள் விழுந்தால், மாட்டின் உரிமையாளரை கிணற்றுக்குள் இறங்கச்செய்து, மாட்டைக் கயிற்றால் கட்டி மேலே தூக்குவார்கள். ஆனால், கிணற்றுக்குள் விழுந்தது ஆக்ரோஷமான காட்டு மாடு என்பதால், அதன் அருகில் தீயணைப்புத்துறையினரால் செல்ல முடியவில்லை. மேலும், காட்டு மாடு கிணற்றுக்குள் விழுந்ததில் அதற்கு  பலத்த அடி. இதனால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரண்டு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு, மாட்டின் கொம்பு, கழுத்து, கால் பகுதிகளில் கயிற்றைக் கட்டி மேலே தூக்கினர். மேலே தூக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாடு பரிதாபமாக உயிரிழந்தது.

மாடு பலியாக காரணம், அதனை மீட்க அதன் கழுத்தில் கட்டப்பட்ட கயிறுதான் என்ற குற்றச்சாட்டு தேனி வட்டாரத்தில் எழுந்தது. அதற்கு விளக்கம் கொடுத்த வனத்துறை, "மாடு கிணற்றுக்குள் விழுந்ததில் அதற்கு தலை, கால், உடலில் பலத்த அடி. அதனால் தான் உயிரிழந்தது. மேலும், பல மணி நேரம் தண்ணீரில் தத்தளித்தது. மயக்க மருந்து செலுத்தவும் முடியாது. காரணம் மயங்கி தண்ணீரில் மூழ்கவும் வாய்ப்பு அதிகம். இதனாலேயே கயிற்றைக் கட்டி மேலே தூக்கினோம்" என்றனர். இச்சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.