தென் மாவட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - விருப்பம் உள்ளோர் பங்கேற்க அழைப்பு! | Aquatic birds survey of the Southern District to be conducted on 25th january

வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (19/01/2018)

கடைசி தொடர்பு:13:00 (19/01/2018)

தென் மாவட்ட நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - விருப்பம் உள்ளோர் பங்கேற்க அழைப்பு!

தென் மாவட்டங்களில் நீர் நிலைகளில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யலாம் என அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

பறவைகள் கணக்கெடுப்பு

தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் 8 வது ஆண்டாக நடைபெற உள்ளது. வரும் 25-ம் தேதி தொடங்க இருக்கும் இந்தப் பணியில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம், நெல்லை மாவட்ட அறிவியல் மையம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கைச் சங்கம், நெல்லை இயற்கைச் சங்கம், ராமநாதபுரம் கோரமண்டல் கடல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து நடத்த உள்ளன.

சமீப காலமாகப் பறவைகள் வசிக்கும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்துள்ளன. அத்துடன் நீர் நிலைகளில் கழிவுகளைக் கொட்டுதல், நகரமயமாக்குதல் போன்றவை நடக்கின்றன. மேலும், முறையற்ற நீர் விநியோகமும் நடைபெற்று வருவதால் நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றன. அதனால் பறவைகளையும் நீர்நிலை உயிரினங்களையும் பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 

வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, முதன்முறையாக ராமநாதபுரம், குமரி மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் வறட்சி பாதிக்கப்பட்டதாக இருந்தபோதிலும், அங்கு 5 பறவைகள் காப்பகங்கள் உள்ளன. அதனால், தாமிரபரணி பாயும் செழிப்பான பகுதிகளில் மட்டும் அல்லாமல் வறட்சி பாதித்த பகுதிகளில் பறவைகள் எப்படி சமாளித்து வாழ்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அழைப்பிதழ்

பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்களுக்கு ஜனவரி 25-ம் தேதி நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 26 மற்றும் 27-ம் தேதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. 28-ம் தேதி ராமநாதபுரம் குளங்களிலும் 29-ம் தேதி குமரி மாவட்டத்தின் நீர் நிலைகளிலும் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. 

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்போது, கடுமையான வறட்சி நிலவியதால் 8,256 பறவைகள் மட்டுமே இருப்பது தெரிய வந்தது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் சராசரியாக 30,000 பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சுமார் 30 சதவிகிதம் பறவைகள் வெளிநாட்டுப் பறவைகளாகும். இந்த ஆண்டு பருவ மழை பெய்துள்ளதால் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. அதனால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தன்னார்வலர்கள் mathi@atree.org என்ற மின்னஞ்சலில் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


[X] Close

[X] Close