வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (19/01/2018)

கடைசி தொடர்பு:16:56 (19/01/2018)

‘டாஸ்மார்க் சரக்குகள் இந்த வீட்டில் கிடைக்கும்!’ - சென்னை போலீஸாரை அதிர வைத்த குடும்பம்

வீட்டில் மதுபானம் விற்பனை

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை வீட்டில்வைத்தே விற்றுவந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மதுபானங்களை விற்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

சென்னை, ஷெனாய் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் டாஸ்மாக் மதுபானங்கள் விற்கப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. டாஸ்மாக் கடைகளிலிருந்து மொத்தமாக மதுபானங்களை வாங்கிவந்து, வீடு மற்றும் பெட்டிக் கடைகளில் வைத்து ஒரு குடும்பமே விற்றது தெரியவந்தது. இதனால், மதுபானங்களை விற்கும் அந்தக் குடும்பத்தைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் ராஜேந்திரன் மேற்பார்வையில், கீழ்ப்பாக்கம் உதவி கமிஷனர் ஹரிகுமார் தலைமையிலான போலீஸார், ஷெனாய் நகர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு 912 மதுபாட்டில்கள் இருந்தன. அதை, போலீஸார் பறிமுதல்செய்தனர். ஆனால், மதுபானங்களை விற்கும் அந்தக் குடும்பம் தலைமறைவாகிவிட்டது.
 

டாஸ்மாக் மதுபானம்

இந்த நிலையில், தலைமைச்செயலகக் காலனி, ஜோதியம்மாள் நகரில் உள்ள வீட்டில், அந்தக் குடும்பத்தினர் தலைமறைவாக இருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன், சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அப்போது, அந்த வீட்டிலும் 384 மதுபாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தன. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு, வீட்டில் பதுங்கியிருந்த இமானுவேல், சிசுராஜா ஆகியோரைக் கைதுசெய்தனர். 

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “சென்னை ஷெனாய் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், சாந்தி. இவரது மகள் ராதிகா, மகன் இளஞ்சூரியன். சாந்தி, நீண்ட காலமாக கஞ்சா, மதுபானங்களை விற்றுவருகிறார். அவர்மீது காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. சாந்தியின் மகள் ராதிகாவும் அவரது கணவர் இமானுவேலும் தலைமைச்செயலகக் காலனி, ஜோதியம்மாள் நகரில் குடியிருக்கின்றனர். அவர்களும் மதுபானங்களை விற்றுவருகின்றனர். டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி,  அதைக் கூடுதல் விலைக்கு விற்றுவந்துள்ளனர்.

இந்தத் தகவல் கிடைத்ததும், அந்தக் குடும்பத்தினரைப் பிடிக்கத் திட்டமிட்டோம். திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றனர். கையும் களவுமாக அவர்களைப் பிடிக்கச் சென்றோம். அதில், ராதிகா, இமானுவேல், இளஞ்சூரியன், சாந்தியின் உறவினர்கள் சிசுராஜா, பெட்டிக்கடை நடத்திவரும் தாஸ் மற்றும் சுதா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், சாந்தி மட்டும் தலைமறைவாகிவிட்டார். இவர்களில், பெட்டிக்கடை நடத்திவரும் தாஸை மிரட்டி, அவரது கடையில் மதுபானங்களை விற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எங்களிடம் சாந்தி சிக்கினால், இன்னும் கூடுதல் தகவல் கிடைக்கும்" என்றனர்.  

கைதானவர்கள்

ஷெனாய்நகர், தலைமைச்செயலகக் காலனி உள்ளிட்ட பகுதிகளில், டாஸ்மாக் மதுபானங்கள் வீடுகளில் விற்கப்படுவதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை. மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரும் வீடுகளில் விற்கப்பட்ட மதுபானங்கள்குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், துணை கமிஷனர் ராஜேந்திரனும், உதவி கமிஷனர் ஹரிகுமாரும் அதிரடியாக சோதனை நடத்தி, சாந்தியின் குடும்பத்தினர்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். சாந்தி, ராதிகா ஆகியோரின் வீடுகள் மினி டாஸ்மாக் கடைகள்போலவே செயல்பட்டுள்ளன. குடிமகன்கள் விரும்பிக்கேட்கும் மதுபானங்களை மட்டுமே இந்தக் குடும்பம் விற்றுள்ளது. சென்னையில் வீட்டையே மினி டாஸ்மாக் கடைகள் போல நடத்திய சாந்தி குடும்பத்தினர்குறித்த தகவல், அந்தப் பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


டிரெண்டிங் @ விகடன்