வெளியிடப்பட்ட நேரம்: 16:17 (19/01/2018)

கடைசி தொடர்பு:16:17 (19/01/2018)

'ரூ.16,000 கட்டினால் 40 நாள்களில் 1 பவுன்'- தோழியுடன் சிக்கிய நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஊழல், லஞ்சம், மோசடிக்கு எதிராக தனது எனர்ஜி முழுவதையும்  செலவிட்டுவரும் நிலையில், அவருடைய கட்சியைச் சேர்ந்தவர் மோசடியில் ஈடுப்பட்டிருப்பது, சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் தொகுதி பொறுப்பாளராக இருப்பவர், தீபக். இவரும் அவருடைய தோழி அன்பரசியும் சேர்ந்து ரூ.16,000 கட்டினால் 40 நாள்களில் 1 பவுன் கொடுக்கப்படும். 5 பவுனுக்கான பணத்தைக் கொடுத்தால், 1 பவுன் கூடுதலாக  வழங்கப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகளை அள்ளிவிட்டு, பல லட்சம் மோசடி செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி எடப்பாடி நாச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல், ''ஓமலூரில் உள்ள லோக்கல் சேனலில் ரூ.16 ஆயிரம் கட்டினால் 40 நாள்களில் 1 பவுன் கொடுக்கப்படும். 5 பவுனுக்கான பணத்தைக் கொடுத்தால், 6 பவுனாக வழங்கப்படும் என விளம்பரமும் தொடர்பு எண்ணும் வந்தது. அதையடுத்து, தீபக் மற்றும் அன்பரசி ஆகியோரை நேரில் சந்தித்துக் கேட்டபோது...

தீபக், நாம் தமிழர் கட்சியின் மேட்டூர் பொறுப்பாளர். இவர், மேட்டூர் கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அன்பரசி அழகு நிலையம் வைத்திருப்பவர் என்றும், வேலக்கவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவர்கள், ஓமலூர் சின்னமாரியம்மன் கோயில் தெருவில் சரவணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் புதியதாக நகைக்கடை திறக்க உள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

மேலே குறிப்பிட்ட நகை சேமிப்புத் திட்டத்தில் பலரும் பணம்செலுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு, 40 நாள்கள் கழிந்ததும் பவுன் கொடுத்துவிடுவோம். நிச்சயம் இந்தத் திட்டத்தில் நீங்கள் சேர்ந்து பணம் செலுத்திப் பயனடையலாம். இது, குறுகிய காலத் திட்டம். அதற்குள் சேர்ந்துகொள்ளுங்கள் என்றார்கள். அதன்பேரில் நாங்கள் பணம் செலுத்தினோம். ஆனால் 40 நாள்கள் ஆன பிறகு பவுன் கொடுக்கவில்லை. பணத்தைத் திருப்பிக் கேட்டபோதும் கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். எங்களைப் போல ஓமலூர், நங்கவள்ளி, மேட்டூர், சேலம் போன்ற பல பகுதிகளில் உள்ள பலரும் பணம் கொடுத்து ஏமாந்திருக்கிறார்கள். இவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்கள்.

இதுப்பற்றி ஓமலூர் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் கேட்டதற்கு, ''இதுவரை 5 பேர் நேரடியாக எங்களிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். சிறிது காலத்துக்கு முன்புதான் இந்த மோசடி வேலையைத் தொடங்கியிருக்கிறார்கள். 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பணம் பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. இன்னும் எவ்வளவு பேரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என்றார்.