வெளியிடப்பட்ட நேரம்: 17:22 (19/01/2018)

கடைசி தொடர்பு:18:14 (19/01/2018)

`அமைச்சர் காமராஜால் என் உயிருக்கு ஆபத்து' - கதறும் அ.தி.மு.க நகரச் செயலாளர்

அமைச்சர் காமராஜ் மற்றும் அவரின் மைத்துனர் ஆர்.ஜி.குமார் ஆகியோரால் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால் மன்னார்குடி நகரச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனவும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நகரச் செயலாளர் மாதவன் என்பவர் தன் கட்சி அமைச்சர் மேல் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17-ம் தேதி மன்னார்குடியில் திவாகரன் தலைமையில் எம்.ஜி.ஆரின் 101 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தேரடியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கு ஏற்றப்பட்டிருந்த அ.தி.மு.க கொடியை இறக்கிவிட்டு அண்ணா படம் போடாத டி.டி.வி அணியின் கொடியை ஏற்றினார் திவாகரன் மகன் ஜெயானந்த். நேற்று அந்தக் கொடியைக் காவல்துறையினரின் உதவியோடு அ.தி.மு.க-வினர் சிலர் கீழே இறக்கிக் கிழித்துப்போட்டுவிட்டு, மீண்டும் அ.தி.மு.க கொடியை ஏற்றினர். இந்தச் சம்பவத்தில் அ.தி.மு.க நகரச் செயலாளர் மாதவன் சரியாகச் செயல்படவில்லை என அமைச்சர் ஆர்.காமராஜ் தரப்பினர் அவரை மிரட்டி தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் மாதவன் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அமைச்சர் தரப்பு மீது புகார் கூறுவதாகவும் பேசப்படுகிறது.

இந்த நிலையில் மாதவன், "நான் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க-வில் இருக்கிறேன். பாரம்பர்யமான அரசியல் குடும்பத்தை சேர்ந்தவன். இக்கட்டான காலகட்டங்களில்கூட அ.தி.மு.க-வுக்காக உழைத்திருக்கிறேன். 25 வருடங்களுக்கும் மேலாக நகரச் செயலாளராகவும் இருக்கிறேன். 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா கொண்டாடபட்டது. அப்போது அமைச்சர் ஆர்.காமராஜால் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்றப்பட்ட கொடியைத் திவாகரன் மகன் இறக்கிவிட்டு டி.டி.வி அணியின் கொடியை ஏற்றினார். அதை நான் தட்டிக் கேட்கவில்லை என்றும், எப்படி கொடியை ஏற்ற வைத்தாய்; தடுத்திருக்க வேண்டாமா என்றும் அமைச்சர் மைத்துனர் ஆர்.ஜி.குமார் என்னை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதோடு, 'உன்னை நகரச் செயலாளர் பதவியிலிருந்து விலக்கிவிட்டோம்' என இரண்டு நாள்களாக எனக்குத் தொல்லை கொடுத்தார். அவர் அமைச்சரின் அனுமதியோடுதான் எனக்கு தொல்லை கொடுக்கிறார் எனத் தெரிந்து கொண்டேன். இத்தனை காலம் கட்சிக்கு விசுவாசமாக உழைத்த எனக்கே இப்படி ஒரு நிலை. எனக்கும் என் உயிருக்கும் எது நடந்தாலும் அதற்கு ஆர்.காமராஜும் அவரின் மைத்துனர் குமாரும்தான் காரணம். அவர்கள் என்னை நீக்குவதற்கு முன்பு நான் நகரச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

அமைச்சர் காமராஜ் தரப்போ, அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக இல்லாமல் திவாகரன் குடும்பத்துக்கு விசுவாசமாக இருக்கிறார். நகர செயலாளர் என்ற முறையில் அவர்தான் கட்சிக்காரர்களை திரட்டி ஜெயானந்த் கொடி ஏற்றுவதை தடுத்திருக்க வேண்டும். அதை கேட்டதற்கு மிரட்டுகிறார்கள் என பொய் சொல்கிறார்" என்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க