ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் விவகாரம்..! டி.டி.வி.தினகரன் அணி ஒப்புதல் வாக்குமூலம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விளையாண்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆளும் கட்சியான அ.தி.மு.க, 6 ஆயிரம் வரையிலும் சுயேச்சையாகப் போட்டியிட்ட டி.டி.வி தினகரன், 10 ஆயிரம் வரை ஓட்டுக்குப் பணம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், தினகரன் 40 ஆயிரத்து 707 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனார்.

முன்னாள் எம்.எல்.ஏ

டி.டி.வி.தினகரன், 20 ரூபாய் டோக்கன் கொடுத்து ஹவாலா முறையில் பணம் வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைபெறும் வீடியோவை முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார். இதுகுறித்தும் சர்ச்சைகள் எழுந்தன.

இந்நிலையில், திருச்சியை அடுத்துள்ள  முசிறியில், திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க தினகரன் அணி சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  தினகரன் ஆதரவாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ராஜசேகரன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, 'ஆர்.கே.நகர்  இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு தினகரன் தரப்பில் 20 ரூபாய் டோக்கன் கொடுக்கப்பட்டது உண்மைதான். தினகரன் வெற்றிபெற முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்துதான் இந்தத் திட்டத்தைத் தீட்டினோம். அந்தத் திட்டம் நன்றாகவே பலனளித்தது. அதுமட்டுமல்லாமல், டி.டி.வி.தினகரனை வெற்றிபெறச் செய்யத்தான் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல, வீடியோவை வெளியிடுமாறு வெற்றிவேலிடம் சொன்னதே தினகரன்தான். ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ சிப்பை தினகரன் வெற்றிவேலிடம் கொடுத்தபோது நான் அங்கிருந்தேன். அந்த வீடியோவை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது, 'ஒரு வழக்குதானே பார்த்துக்கொள்ளலாம் எனத் தைரியம் கூறி அனுப்பிவைத்தோம்.”

ஆர்.கே.நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஆளுங்கட்சியினர் கொடுத்தபோது, தினகரன் அணியில் உள்ளவர்கள் பணம் கொடுக்கவில்லை என்றால் தோல்வி அடைந்துவிடுவோம் என்கிற நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் செய்த சூழ்ச்சிகளை முறியடித்திட, நாங்கள் டி.டி.வி.தினகரனிடம் முறையிட்டோம். அதையடுத்துதான் தினகரன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை வெளியிட, தினகரன் வெற்றிவேலிடம் சி.டி-யைக் கொடுத்தார். நாங்கள் போட்ட மாஸ்டர் பிளானில் வெற்றிபெற்றுள்ளோம். அதேபோல, வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற நிர்வாகிகள் தயாராகுங்கள்'' என்றார்.

இந்நிலையில்,  உள்ளரங்குக் கூட்டத்தில் பேசப்பட்ட ராஜசேகரன் பேசிய வீடியோ இன்று வைரலானது. பல்வேறு விமர்சனங்களையும்  ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றிபெற்றதுகுறித்து மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று  திருச்சியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தொட்டியம் ராஜசேகரன், 'தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக நான் அப்படிப் பேசினேன். 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த அந்த அணிக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லை. ஆனால், நாங்கள் கொடுத்த 20 ரூபாய்க்கு என்றவர், தான் பேசிய பேச்சு  தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஜெயலலிதா மரணம்குறித்து சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியிருந்த கருத்து பலத்த சர்ச்சையை உண்டாக்கியுள்ள நிலையில், தினகரன் ஆதரவாளரான ராஜசேகரின் இந்தப் பேச்சு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டி.டி.வி தினகரன், “ராஜசேகரன் பேசியுள்ளது தவறானது. இதற்காக ராஜசேகரன் தொலைபேசியில் மன்னிப்புக் கேட்டதாகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!