வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (20/01/2018)

கடைசி தொடர்பு:08:39 (20/01/2018)

எடப்பாடி அணி எம்.எல்.ஏ வைத்த பேனரை தினகரனுக்காக கழற்றி வந்த நிர்வாகிகள்...! - சரத்பிரபு வீட்டில் நடந்த சம்பவம்

டெல்லி மருத்துவக் கல்லூரியில் மர்ம மரணமடைந்த சரத்பிரபுவின் உடல், நேற்று இரவு அவரது சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துவரப்பட்டு, இன்று காலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் மாணவர் சரத்பிரபுவின் இல்லத்துக்கு அஞ்சலி செலுத்த டி.டி.வி.தினகரன் வந்திருந்தார்.

 தினகரன் வருவதற்கு முன்பு,  அவருக்கான ஏற்பாடுகளை கவனிக்கிறோம் என்றுகூறி, துக்க வீட்டைப் பாடாய்ப்படுத்திவிட்டார்கள் தினகரன் ஆதரவாளர்கள். "சரத்பிரபுவின் உருவப் படத்துக்கு அண்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தப்போகிறார். எனவே, மாணவனின் போட்டோ ஒன்றை வீட்டில் தயாராக மாட்டிவையுங்கள் என்று சரத்பிரபுவின் உறவினர்களிடம் தினகரன் தரப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால், எங்கள் சமூகத்தில் 16-ம் நாள் காரியத்தின்போதுதான் இறந்தவரின் போட்டோவை வைத்து பூஜை செய்வோம். எனவே, இப்போது போட்டோ எல்லாம் வைக்க முடியாது என்று உறவினர்கள் தரப்பில் மறுத்திருக்கிறார்கள்.

பின்னர் யோசனையில் ஆழ்ந்த தினகரன் அணி நிர்வாகிகள், அங்கு மாணவனின் வீட்டுக்கு வெளியே கம்பி வேலியில், திருப்பூர் எம்.எல்.ஏ குணசேகரன் சார்பில் கட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி பேனரை கழற்றிக் கொண்டுவந்து, அதில் எம்.எல்.ஏ-வின் பெயரை மட்டும் மறைத்துவிட்டு, அந்த பேனருக்கு மலர் மாலைகளைக் கட்டி, மறைந்த சரத்பிரபுவின் வீட்டு வாசலில் அலங்காரம்செய்து வைத்தனர்.

தினகரனும் வந்து சரத்பிரபுவின் குடும்பத்தாரிடம் இரங்கல் தெரிவித்துவிட்டு, அந்த பிளக்ஸ் பேனருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டார்.