மதவெறி அரசியலை முறியடிக்க மக்கள் ஒன்றுபட வேண்டும்..! டி.ராஜா வேண்டுகோள்

'மதவெறி அரசியலை முறியடித்து, தமிழக மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவ ஊடுருவல் என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகள் ஒப்புக்கொண்ட ‘லைன் ஆஃப் கன்ட்ரோலை’ பாகிஸ்தான் மீறி செயல்பட்டுவருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, 'நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் அண்டை நாடுகளை மாற்றிக்கொள்ள முடியாது' என்று சொன்னார்.  

ஹஜ் பயணிகளுக்கு அரசு இதுவரையிலும் கொடுத்துவந்த மானியத்தைக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது, அரசாங்கத்தின் முடிவு என்று வந்தாலும், கடந்த 2012-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஹஜ் மானியத்தை படிப்படியாகக் குறைத்து, கைவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதனடிப்படையில் அரசு இந்த முடிவை அறிவிக்கிறது. ஹஜ் பயணிகளுக்கான மானியம் என்பதைவிட, பயணம் மேற்கொள்ளும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்துக்குத்தான் மானியம் போய்க்கொண்டிருந்தது எனும் யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

விமானப் பயணத்துக்கான மானியமே தவிர, ஹஜ் பயணிகளுக்கான மானியம் அல்ல. ஹஜ் பயணிகள் எந்த விமானத்திலும் செல்லலாம் என்ற நிலை வருமானால், தானாகவே விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம் முறையாகத் தெரியவில்லை. இந்த மானியத்தைக் குறைத்து, அந்த நிதியை முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தலாம் என்பது பொருத்தமான வாதம் கிடையாது. பெண்கள் முன்னேற்றம் என்பது தனி, அது அரசாங்கத்தின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும். அதற்கும், ஹஜ் மானியத்தை கைவிடுவதற்கும் ஒரு பொருத்தப்பாட்டை உருவாக்கி, சில வித சந்தேகங்களை மத்திய அரசே உருவாக்குவது சரியானதல்ல. 

இன்றைக்கு இருக்கும் மாநில அரசை ஆட்டிப்படைக்கும் அரசாகத்தான் மத்திய அரசு இருக்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்துபோகும் அரசாக மாநில அரசு இருக்கிறது. அப்படியிருந்தும், ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை, நதி நீர் பங்கீட்டுக்கு என்ன தீர்வு காணப்படவிருக்கிறது, முறையான தீர்வு எப்போது கிடைக்கவிருக்கிறது என்பதை தமிழக முதல்வர் விளக்க வேண்டும். இந்த மாநில அரசு தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கான தார்மீக உரிமைகளை இழந்துவிட்டது.

எனவேதான், இந்த அரசு உடனடியாக  பதவி விலக வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். தமிழகத்தில், தற்போது பெரும் அரசியல் நெருக்கடி தொடர்கிறது. இதைப் பயன்படுத்தி மதவெறி அரசியலை பின்பற்றும் அமைப்புகள், தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக மக்கள், மதவெறி அரசியலை முறியடித்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும்'' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!