வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (20/01/2018)

கடைசி தொடர்பு:08:08 (20/01/2018)

தமிழக மக்கள் மதவெறித் தூண்டுதலை ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள். பி.ஜே.பி-க்கு நல்லகண்ணு பதிலடி!

'தமிழக மக்கள், மதவெறித் தூண்டுதலை ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள்' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார். 

சிவகங்கையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆர்.நல்லகண்ணு, சிவகங்கை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``ஜெயலலிதா மரணத்துக்குப்பின், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் இன்றைய அ.தி.மு.க அரசு, அவர் எதிர்த்த மாநில உரிமைகளைப் பறிக்கும் நீட், ஜி.எஸ்.டி, கச்சத்தீவு உள்பட பல பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தவும் இல்லை. எதிர்க்கவுமில்லை.

இதனால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அவரால் கொண்டுவரப்பட்டும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தவில்லை. இதுபோன்ற காரணங்களால் பங்கீட்டு தண்ணீர் கிடைக்காமல் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழை வளர்க்கும் வகையிலும் திருப்பாவை போன்ற படைப்புகளை ஆண்டாள் உருவாக்கினார் என்பதே வைரமுத்து பேச்சின் சாராம்சம். தமிழை ஆண்டாள் என பாராட்டித்தான் எழுதியுள்ளார்.

அதில் அமெரிக்கப் பேராசிரியரின் கருத்தைத்தான் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேராசியரின் கருத்துக்கு உடன்பாடா இல்லையா என்பதையும் அவர் தெரிவிக்கவில்லை. இதில், மதவெறியைத் தூண்டும் வகையில் ஹெச்.ராஜா போன்றோர் பேசிவருகின்றனர். இதற்கு, வைரமுத்து மன்னிப்பும் கேட்டுள்ளார். எனவே, தமிழக மக்கள் மதவெறித் தூண்டுதலை ஒருபோதும் ஆதரிக்கவும் மாட்டார்கள், அனுமதிக்கவும் மாட்டார்கள்'' என்று தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க