`வேசி - தாசி...' ஆண்டாள் சர்ச்சைகுறித்து வைரமுத்து விளக்கம்!

ஆண்டாள் கட்டுரை தொடர்பான சர்ச்சைகுறித்து கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். 

Vairamuthu

 

ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள்குறித்து ஒரு நாளிதழில் வைரமுத்து எழுதியிருந்த கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து வைரமுத்து மன்னிப்பு கேட்டார். ஆண்டாளை அவமதிப்பது என் நோக்கமல்ல என்று கூறினார். என்றாலும் சிலர் சமாதானமடையவில்லை. வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் உண்ணாவிரதப் போராட்டமிருந்தார். வைரமுத்துமீது வழக்குகள் பதியப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கத் தடை கோரியும், தன் மீதான நியாயத்தைத் தெரிவித்தும் கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வைரமுத்து பேசியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்றக் கருத்தை தெரிவித்தது. வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்தது. 

இந்நிலையில், வைரமுத்து ஆண்டாள் சர்ச்சைக் குறித்து விளக்கமளித்து வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆண்டாள் புகழ்பாட நான் ஆசைப்பட்டது தவறா? கடந்த 10 நாள்களாக மூர்ச்சையற்றுக் கிடக்கிறேன். ஆண்டாள் பாசுரங்கள் பாடப்பாட எனக்கு பக்தி பிறக்கிறது. சக்தி பிறக்கிறது. ஆண்டாள்குறித்து பேசுவதற்காக ஆய்வுக்கட்டுரைகளை 3 மாதங்களாக ஆராய்ச்சி செய்தேன். தமிழ்வெளியில் கேட்ட முதல் பெண் விடுதலைக்குரல் ஆண்டாள் என்று நான் பேசினேன். புதிய தலைமுறையும், இளையதலைமுறையும் பயன்பெறவே ஆண்டாள் பற்றி கட்டுரை எழுதினேன். சமூக, சமூகவியல் பார்வையுடையவள் ஆண்டாள். ஆண்டாள் பற்றி நான் சொன்னதாக சர்ச்சைக்குள்ளாகும் விஷயம் நான் பேசியது அல்ல.


தாசி என்ற கருத்து திரிக்கப்பட்டு வேசி எனப் பரப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் மத இனக் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். தேவதாசி என்பது உயர்ந்த குலப்பெண்களுக்கு வழங்கப்பட்ட சொல். யாரோ மதம் கலந்த அரசியலுக்காகவோ, அரசியல் கலந்த மதத்துக்காகவோ இதைத் திரித்துவிட்டனர். இவர்கள் மத்தியில் தமிழ் வளர்க்க வேண்டுமென நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. என் தமிழால் யாரும் புண்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் வருத்தம் தெரிவித்தேன்” என்று பேசியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!