`போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை'- பொன்னையன் பகீர் | Sasikala family give slow poison to Jayalalithaa for 8 months alleges Ponnaiyan

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (20/01/2018)

கடைசி தொடர்பு:16:00 (20/01/2018)

`போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சை'- பொன்னையன் பகீர்

'எட்டு மாதமாக ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து, சசிகலா குடும்பத்தினர் கொன்றுவிட்டார்கள்' என முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஜெயலலிதா மரணம் குறித்து பொன்னையன்

காஞ்சிபுரம் அ.தி.மு.க சார்பில், எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் உள்ள, பெரியார் தூண் அருகே நேற்று நடைபெற்றது.  இதில் அ.தி.மு.க செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு லேசாக சர்க்கரை இருந்தது. அதனால், அவரது கையிலும் கால்களிலும் கொப்புளங்கள் ஏற்பட்டன. உடலில் கொப்புளம் ஏற்பட்டால், ஆயின்மென்ட் போட்டால்போதும் சரியாகிவிடும். ஆனால், ஸ்டீராய்டு என்று சொல்லக்கூடிய மெள்ளக் கொல்லும் விஷ ஊசி தொடர்ந்து போட்டிருக்கிறார்கள். எமர்ஜென்சி மெடிஸின் மாதிரி ஒரு வருடத்துக்கு நான்கைந்து முறை அந்த மருந்துகளைப் போடலாம். ஆனால், தொடர்ந்து எட்டு மாத காலம் ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு ஊசிகளைப் போட்டதால், சர்க்கரை அளவு 560 வரை அதிகரித்தது. அதை, சசிகலா குடும்பத்தினர் வெளியில் சொல்லவில்லை.

அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை அனுமதித்த பிறகுதான், மருத்துவர்கள் போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சையைப் பார்த்த பிறகு தெரியவந்தது. ஸ்டீராய்டு மருந்தைத் தொடர்ந்து போடக்கூடாது. அப்படிப் போட்டால், அது சர்க்கரை அளவைக் கூட்டிவிடும். தொற்றைப் பரப்பிவிடும். உயிரைக் கொன்றுவிடும் என்பதெல்லாம் ஒரு சாதாரண நர்ஸுக்குக்கூட தெரியும்.  தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்து செலுத்துவதன் காரணமாக, அந்தத் தொற்று சீராக ரத்தத்திலும் நுரையீரலிலும், இதயத்திலும் கலக்கிறது. ஸ்லோ பாய்சன் என்ற முறையில் எட்டு மாதகாலமாக முயற்சிசெய்து அம்மாவை தீர்த்துக்கட்டிவிட்டார்கள். இதை விசாரிக்க வேண்டியது நீதிவிசாரணைக் கமிஷனின் கட்டாயப் பணி என்று நாங்கள் சொல்கிறோம்.

ஜெயலலிதா இறந்தவுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, அவர் மயக்கநிலையில் இருந்தார் என திவாகரன் சொல்கிறார். ஜெயலலிதா சிகிச்சைபெறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். ‘மருத்துவமனை உள்ளே அப்படி ஒரு வீடியோ எடுக்க முடியாது’ என அப்போலோ நிர்வாகமே சொல்லியிருக்கிறது. ‘ஜெயலலிதா 4-ம் தேதியே இறந்துவிட்டார். ஆனால், 5-ம் தேதி இறந்ததாக அறிவித்திருக்கிறார்கள்’ என சசிகலாவின் உடன் பிறந்த சகோதரர் திவாகரன் சொல்கிறார். சூழ்ச்சிகள் வெளிவரத் தொடங்கியதை அடுத்து, அவர்கள் பிதற்றலில் இருக்கிறார்கள். இதைக் கண்டறியவேண்டிய கடமை, நீதி விசாரணை கமிஷனுக்கு இருக்கிறது' என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க