`இப்படி அநியாயமா ஏத்துறது எங்களோட ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி இருக்கு' - கொந்தளித்த கூலித் தொழிலாளிகள் | Pudukottai:Workers oppose TN bus fare hike

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/01/2018)

கடைசி தொடர்பு:17:20 (20/01/2018)

`இப்படி அநியாயமா ஏத்துறது எங்களோட ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி இருக்கு' - கொந்தளித்த கூலித் தொழிலாளிகள்

தமிழக அரசு நேற்று பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி, உடனடியாக நள்ளிரவு முதல் அதை அமலுக்குக் கொண்டு வந்தது. காலையில் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் கூடுதல் கட்டண வித்தியாசத்தை அறிந்து அதிர்ந்துப்போனார்கள். மலைக்கும் மடுவுக்கும் உள்ள உயர்வாக அது மக்களுக்குத் தோன்றியதால், தமிழ்நாடு முழுக்க தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள். பேருந்து நடத்துநர்களுக்கும் மக்களுக்கும் நடக்கும் வாக்குவாதம் மாநிலத்தின் மிக முக்கிய பேருந்து நிலையங்களில் தற்போது நடந்து வருகிறது. விலை உயர்வு வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், இந்தக் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டிருப்பதால், மக்களின் மனநிலை கொதிநிலையில் இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பேருந்து நிலையத்தில், இன்று காலை தனியார் பேருந்துகள் மக்களால் சிறைபிடிக்கப்பட்டன. பயணிகளுக்கும் தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையே, நடந்த வாக்குவாதம் உச்சத்தைத் தொட்டது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில், கடும் வசவுகளால் பயணிகள் அரசாங்கத்தை வறுத்தெடுத்தனர். "கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா. இப்படி அநியாயமா ஏத்துறது எங்களோட ரத்தத்தை உறிஞ்சுற மாதிரி இருக்கு. சம்பாதிக்கிற பணத்துல பாதியைப் பஸ்காரனுக்கே கொடுத்துட்டா, நாங்க எப்படி குடும்பம், குழந்தைக்குட்டிகளைப் பார்க்கிறது. சாகடிக்கிறாங்களேங்க. பஸ் கட்டணம் ஏறிடுச்சு. சம்பளத்தை ஏற்றிக்கொடுங்கனு நாங்க வேலை செய்யிற முதலாளிகளுக்கிட்ட கேட்க முடியுமா" என்று ஆத்திரம் பொங்கும் குரலில் கொதிக்கிறார்கள் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள்.

"அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதோடு தனியாருக்கும் இந்தக் கட்டண உயர்வை தாரை வார்த்திருக்கறாங்களே ஏன். இது மக்களுக்கான அரசாங்கமா, தனியார் முதலாளிகளுக்கான அரசாங்கமா. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைக் கூட்டிக் கொடுக்கணும்னா அரசாங்கமே செய்யணும். மக்களுடைய பாக்கெட்டிலிருந்து பிடுங்கித் தரக்கூடாது" என்று அன்றாடம் அலுவலகத்துக்குச் சென்று வருகிறவர்கள் புலம்புகிறார்கள். "மின்வாரியம், போக்குவரத்து, பால்உற்பத்தி இந்தத் துறைகள் லாபத்தில் இயங்குவதாக தமிழ்நாட்டை ஆண்ட எந்த அரசும் இதுவரை சொன்னதே இல்லை. கட்டணத்தை உயர்த்தணும்னு முடிவு பண்ணும்போதெல்லாம், 'நஷ்டத்தில் இயங்குகிறது' என்று ஆட்சியாளர்கள் சொல்வதே வழக்கமாக இருக்கிறது. அடுத்து வர்ற 23-ம் தேதி மின்வாரிய ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்கள். அவர்களும் ஊதிய உயர்வைத்தான் முன் நிறுத்துகிறார்கள். என்ன நடக்கும். பேருந்துக் கட்டண உயர்வைத் தொடர்ந்து அடுத்ததாக, மின்கட்டண உயர்வு இருக்கும். 'மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதால், இந்த விலை உயர்வை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் மின்கட்டணம் {குறைவுதான்'னு சொல்லுவாங்க" என்ற மக்களின் கொதிப்பையும் பல்வேறு இடங்களில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில், மக்களின் எதிர்ப்பைக் காரணம் காட்டி, இன்னும் இரண்டு தினங்களில் உயர்த்தப்பட்ட கட்டணத்திலிருந்து ஓரளவு குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.