வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (20/01/2018)

கடைசி தொடர்பு:16:07 (20/01/2018)

“ஹஜ் மானியம்... மத்திய அரசுக்கு அடிபணிந்து போகிறது தமிழக அரசு!” - டி.ராஜா

சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் இல்ல திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவல் என்பது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகள் ஒப்புக்கொண்ட ‘லைன் ஆப் கன்ட்ரோலை’ பாகிஸ்தான் மீறி செயல்பட்டு வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம், ஆனால் அண்டை நாடுகளை மாற்றிக்கொள்ள முடியாது என்று சொன்னார். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள், இரண்டு நாடுகளுக்கு மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கையை வளர்த்து இருக்கிற பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர ராணுவ ஊடுருல் அல்லது பயங்கரவாத சக்திகளை ஊக்குவித்து ராணுவ மோதல்களில் ஈடுபடக் கூடாது. பாகிஸ்தான் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் நம்பகத்தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் அதனை பாகிஸ்தான் செய்வதாக இல்லை. இந்தப் பின்னணியில்தான் ராணுவ ஊடுருவல் நடைபெற்றுவருகிறது.

ஹஜ் பயணிகளுக்கு அரசு இதுவரையிலும் கொடுத்துவந்த மானியத்தை இன்றைக்குக் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது அரசாங்கத்தின் முடிவு என்று வந்தாலும் கடந்த 2012ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஹஜ் மானியத்தைப் படிப்படியாகக் குறைத்து கைவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. அதனடிப்படையில் அரசு இந்த முடிவினை அறிவிக்கிறது. ஹஜ் பயணிகளுக்கான மானியம் என்பதைவிட பயணம் மேற்கொள்ளும் விமானப் போக்குவரத்து கட்டணத்திற்குத்தான் மானியம் போய்க்கொண்டிருந்தது எனும் யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். விமானப் பயணத்திற்கான மானியமே தவிர ஹஜ் பயணிகளுக்கான மானியம் அல்ல. ஹஜ் பயணிகள் எந்த விமானத்திலும் செல்லலாம் என்ற நிலை வருமானால் தானாகவே விமானக் கட்டணம் குறையும் வாய்ப்பிருக்கிறது. இதற்கு அரசாங்கம் சொல்லும் காரணம் முறையாகத் தெரியவில்லை. இந்த மானியத்தை குறைத்து அந்த நிதியை முஸ்லிம் பெண்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தலாம் என்பது பொருத்தமான வாதம் கிடையாது. பெண்கள் முன்னேற்றம் என்பது தனி, அது அரசாங்கத்தின் முக்கியக் கடமையாக இருக்க வேண்டும். அதற்கும், ஹஜ் மானியத்தை கைவிடுவதற்கும் ஒரு பொருத்தப்பாட்டை உருவாக்கி சில விதமாக சந்தேகங்களை மத்திய அரசே உருவாக்குவது சரியானதல்ல. இதுவரை இந்த மானியம் உண்மையில் யாருக்குப் போய்ச் சேர்ந்தது, பயணிகளுக்குச் சென்றதா, விமானப் போக்குவரத்திற்குச் சென்றதா என்பதை மத்திய அரசு புள்ளி விவரங்களோடு விளக்க வேண்டும்.

ஹஜ் பயணம்

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தி செயல்படுத்திய பிறகு பல குழப்பங்கள் தொடர்ந்து  நிலவி வருகின்றன. இதனால் மாநில அரசுகள் இழப்பு ஏற்படுவதாகச் சொல்லிவருகிறது. மாநில அரசு இழப்பீடு எவ்வாறு வழங்கப்படவிருக்கிறது என்பதும் பிரச்னையாக உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்காகப் பாராளுமன்றம் கூடும்போது அதன் ஒருபகுதியாக ஜிஎஸ்டி பற்றி விவாதிக்கப்பட வேண்டும். மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி எப்படி விளக்கவிருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இன்றைக்கு இருக்கிற மாநில அரசை ஆட்டிப்படைக்கும் அரசாகத்தான் மத்திய அரசு இருக்கிறது. மத்திய அரசுக்கு அடிபணிந்து போகும் அரசாக மாநில அரசு இருக்கிறது. அப்படியிருந்தும் ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை, நதி நீர் பங்கீட்டுக்கு என்ன தீர்வு காணப்படவிருக்கிறது, முறையான தீர்வு எப்போது கிடைக்கவிருக்கிறது என்பதை தமிழக முதல்வர் விளக்கம் வேண்டும். ஆனால் முதல்வரிடம் இதற்கு தகுந்த பதில் இல்லை. எனவேதான் இன்றைக்கு இருக்கும் தமிழக அரசு, மத்திய அரசுக்கு அடிபணிந்து போகும் அரசாக உள்ளது. மாநில உரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராடும் அரசாக இல்லை. மாநில மக்களின் நலனை கைவிட்டு, அவர்களது நம்பிக்கையைப் புறக்கணித்து, அம்மக்களுக்குத் துரோகம் இழைக்கும் ஓர் அரசாகத்தான் தமிழக அரசு இருந்து வருகிறது. இந்த மாநில அரசு தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கான தார்மிக உரிமைகளை இழந்துவிட்டது. எனவேதான் இந்த அரசு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழகத்தில் தற்போது பெரும் அரசியல் நெருக்கடி தொடர்கிறது. இதைப் பயன்படுத்தி மதவெறி அரசியலை பின்பற்றும் அமைப்புகள் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். இதனை தமிழக மக்கள் கணக்கில் கொண்டு மதவெறி அரசியலை முறியடித்து ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்