`மற்றவர்கள் சொல்வதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை'- உண்ணாவிரதத்தில் முழங்கிய கிருஷ்ணசாமி

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் புதிய தமிழகம் கட்சியினர் இன்று மதுரை பழங்காநத்தத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர். இதில், பல மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்துக்குத் தலைமையேற்ற புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ''தியாகி இமானுவேல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சமூக நீதிப்போராளி, அதனாலயே அவர் கொல்லப்பட்டார். தேவேந்திரகுல வேளாளர் மக்களால் மதிக்கப்படும் அவர் பெயரை, மதுரை விமானநிலையத்துக்கு வைக்க வேண்டுமென்று 20 ஆண்டுகளாகக்  கோரிவருகிறோம். அதுமட்டுமல்லாமல், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே மதுரை விமான நிலையம் அமைப்பதற்கு சின்ன உடைப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திர குல மக்கள், தங்கள் நிலங்களைக் கொடுத்தார்கள். அதன் பிறகு, விரிவாக்கம் செய்யவும்  நிலங்களைக் கொடுத்தார்கள்.

அரசு நிறுவனங்களுக்கு  நிலத்தைக் கொடுத்தவர்கள் விரும்பும் பெயரை வைப்பது, தமிழகத்தில் பொதுவான விதியாக உள்ளது. அந்த அடிப்படையில், தேவேந்திர குல மக்கள் விரும்பும் தியாகி இமானுவேல் பெயரை வைப்பதுதான் நீதியாகும். மற்றவர்கள் சொல்வதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. உழவர்களைப் பெருமைப்படுத்தும் பொங்கல் திருநாளை எழுச்சியாகக் கொண்டாடச் சொல்லும்  தமிழகஅரசு,  வேளான்குடி மக்களான தேவேந்திரர்களின் கோரிக்கையை நிறைவேற்றி மரியாதைசெய்ய வேண்டும். இதுவே தென்மாவட்ட மக்களின் விருப்பம்'' என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!