வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (20/01/2018)

கடைசி தொடர்பு:18:20 (20/01/2018)

2ஜி விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்! - ஆ.ராசா

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தவறாக வழிநடத்தப்பட்டிருப்பதாகத் தகவல்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். 

நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த டிசம்பரில் தீர்ப்பளித்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார். அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. 

இந்தநிலையில், 2 ஜி வழக்கு குறித்து ஆ.ராசா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``2ஜி அலைக்கற்றை ஏலத்தை நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தவறாக வழி நடத்தப்பட்டிருக்கிறார். மத்திய அமைச்சர்கள் சிலராலோ சி.பி.ஐ அதிகாரிகளாலோ அவர் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். ஏலத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதுபோல பிரதமர் மன்மோகன் சிங்கை நம்ப வைத்திருக்கிறார்கள். அதனாலேயே, வழக்கு குறித்து அவர் மௌனம் சாதித்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன். மத்திய தணிக்கைத் துறையின் தலைவராக இருந்த வினோத் ராய், காங்கிரஸ் அரசை வீழ்த்தப் பயன்பட்டிருக்கிறார். காங்கிரஸின் மௌனமே மன்மோகன் சிங் தலைமையிலான அரசை வீழ்த்தியது’' என்றார்.
2 ஜி அலைக்கற்றை வழக்கு குறித்து ’2ஜி சாஹா அன்ஃபோல்ட்ஸ்’ என்ற பெயரில் ஆ.ராசா எழுதியுள்ள புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்படுகிறது. இந்தப் புத்தகம் விரைவில் தமிழிலும் வெளியிடப்படும் என்றும் அதை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் ஆ.ராசா தெரிவித்திருக்கிறார்.