நேற்று அ.தி.மு.க கொடி கிழிப்பு; இன்று கொடிக்கம்பம் உடைப்பு! இது மன்னார்குடி மல்லுக்கட்டு

மன்னார்குடி கீழ ஒத்த தெருவில் உள்ள அ.தி.மு.க கொடிக்கம்பம் நேற்று இரவு உடைக்கப்பட்டது. இதற்கு டி.டி.வி அணியைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என மூன்று பேர்மீது அ.தி.மு.க 10 வது வார்டு செயலாளர் நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17-ம் தேதி எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா மன்னார்குடியில் கொண்டாடப்பட்டது. இதில் டி.டி.வி அணியைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் அ.தி.மு.க கொடிக்கம்பத்திலேயே அவர்கள் பயன்படுத்தும் அண்ணா படம் போடாத கொடியை ஏற்றிவைத்தனர். அந்தச் சமயத்தில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த அ.தி.மு.க-வினர் அடுத்த நாள்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி அணியின் கொடியை கீழே இறக்கிக் கிழித்துப்போட்டுவிட்டு ஒரிஜினல் அ.தி.மு.க கொடியை ஏற்றிய சம்பவம் நடந்தது. டி.டி.வி அணியினர் கொடி ஏற்றிய விவகாரத்தில் அமைச்சர் ஆர்.காமராஜின் மைத்துனர் குமாரும் தன்னை மிரட்டுகிறார்கள் என்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அ.தி.மு.க நகரச் செயலாளர் மாதவனைப் புயார் கூறி பரபரப்பை மேலும் கூட்டினார்.

இந்த நிலையில் இன்று விடியற்காலை 10 வது வார்டில் உள்ள அ.தி.மு.க கொடிக்கம்பம் உடைக்கப்பட்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட  அ.தி.மு.க-வினர் அந்த இடத்தில் கூடினர். பின்னர், டி.டி.வி அணியைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர்மீது வழக்கு கொடுத்த அந்த வார்டின் செயலாளர் நாராயணன், "எப்போதும் டி.டி.வி அணியைச் சேர்ந்தவர்கள்தான் எங்க கொடிக்கம்பம் அருகே நின்றுகொண்டிருப்பார்கள். அவர்கள்தான் இதைச் செய்திருக்கிறார்கள். ஆளும்கட்சி கொடிக்கம்பத்தையே இடிக்கும் அளவுக்கு அவர்களுக்கு தைரியத்தை யார் கொடுத்தது என எங்களுக்குத் தெரியும். முறைப்படி புகார் அளித்திருக்கிறேன்" என்றார்.

டி.டி.வி தரப்போ, மன்னார்குடி பகுதியில் அ.தி.மு.க என ஒன்று இருக்கிறதா எனக் கேட்கும் அளவுக்கு நாங்கள் மிகப் பிரமாண்டமாக எம்.ஜி.ஆர் பிறந்த நாளைக் கொண்டாடினோம். அதன் கோபத்தாலும் காழ்ப்பு உணர்ச்சியாலும் அமைச்சர் ஆர்.காமராஜ் தூண்டுதலின் பேரில் அவர்களே கொடிக்கம்பத்தை இடித்துவிட்டு நாடகமாடுகிறார்கள். எங்கள் மீது புகாரும் கொடுத்திருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திக்க ரெடி" என்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!