வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (20/01/2018)

கடைசி தொடர்பு:15:24 (09/07/2018)

பஸ் கட்டண உயர்வுக்கு இதுதான் காரணம்! - போக்குவரத்துத்துறை அமைச்சரின் அடடே பதில்

 ``அதிக பேருந்துகள் மலைப் பகுதிகளுக்கும் கிராம பகுதிகளுக்கும்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகள் குறைவாகப் பயணிக்கிறார்கள். அதனால், ஏற்படும் 900 கோடி வருவாய் இழப்பை சரிசெய்யதான், இப்போது பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.  

கரூர் மாவட்டம், புஞ்சை புகழூர் பகுதியில் புதிய தார்ச்சாலை போடுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "இப்போது போக்குவரத்துத்துறையில் ஏற்றப்பட்டிருக்கிற பஸ் கட்டணம் தவிர்க்க முடியாதது. போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால்,13 வது ஊதிய உயர்வுக்கு முன்னால் போக்குவரத்துக் கழகத்துக்கு ஒரு நாளைக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஊதிய உயர்வுக்குப் பின்னால் அந்த நஷ்டம் 12 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. இப்படி போக்குவரத்துத்துறை கடுமையான நிதிநெருக்கடியில் இருப்பதால், 2011-ம் ஆண்டுக்குப் பின்னர் 7 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. பேருந்துக் கட்டண உயர்வு இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.

2000-ம் ஆண்டுக்குப் பின்னர், ஆந்திராவில் 16 முறை பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கேரளாவில் 8 முறை உயர்த்தப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் 8 முறை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இரண்டே 2 முறைதான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 22,500 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 12,000 பேருந்துகள் மலைப் பகுதிகளுக்கும் கிராமப் பகுதிகளுக்கும்தான் இயக்கப்படுகின்றன. ஆனால், மலை மற்றும் கிராமப் பகுதிகளில் ஓடும் பேருந்துகளில் பயணிகள் குறைவாகப் பயணிக்கிறார்கள். இருந்தாலும், அந்த மக்களின் போக்குவரத்துக்காக நாங்கள் பேருந்துகளைக் குறைக்காமல் அதே அளவில் இயக்குகிறோம். அந்தவகையில் எங்களுக்கு 900 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதனாலேயே, இந்தப் பஸ் கட்டண உயர்வு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.