வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/01/2018)

கடைசி தொடர்பு:15:49 (22/01/2018)

விகடன் செய்தி எதிரொலி... விழிப்பு உணர்வு செய்துவரும் சிங்கப்பூர் அரசு

கல்வி, பணி, சுற்றுலா, மருத்துவம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக சிங்கப்பூர் செல்லக்கூடிய இந்தியர்களைக் குறிவைத்து மோசடிக் கும்பல் ஒன்று பணம் பறித்துக் கொண்டிருப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. அந்த மோசடிக் கும்பலிடம் இருந்து தப்பிய தமிழகத்தைச் சேர்ந்த பேரிடர் மேலாண்மை பயிற்றுனர் ஹரிபாலாஜி கொடுத்த விரிவான தகவலை அடிப்படையாகக் கொண்டு கடந்த மாதம் விகடன் டாட் காம் செய்தி வெளியிட்டது. செய்தியைப் படித்த பலரும், ’தங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருப்பதாகத் தெரிவித்தனர். சிங்கப்பூர் ஊடகங்களும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து விவாதிக்கத் தொடங்கின. அனைத்தையும் கவனித்த சிங்கப்பூர் அரசு, உடனடியாக செயல்பட்டு, சிங்கப்பூரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மோசடி கும்பல் பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டியுள்ளது. டிவி சேனல்களில் விழிப்புணர்வு விளம்பரங்களை ஒளிபரப்பி வருகிறது.

’ பயப்பட வேண்டாம்… நம்ப வேண்டாம்… பணம் கொடுக்க வேண்டாம்…’ என்ற வாசகத்தோடு ’யாரேனும் சந்தேகம் படும் படியாக போனில் பேசினால், இந்த நம்பருக்கு அழைக்கவும்…’ என்று இலவச எண்ணையும் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த விளம்பரங்கள் இன்னும் இரண்டு மாதங்கள் தொடரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.