வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/01/2018)

கடைசி தொடர்பு:09:00 (21/01/2018)

தமிழகப் போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவது இதனால்தான்! காங்கிரஸ் தாக்கு

நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக போக்குவரத்துதுறை மிக மிக மோசமான நிலையில் இயங்குகிறது என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் ராமசாமி தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள தண்ணீர் தொட்டி அடிக்கல் நாட்டு விழாவிற்கு அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவருமான ராமசாமி வருகை தந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமசாமி, 'தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடு, ஊழல் காரணமாக போக்குவரத்துதுறை மிக மிக மோசமான நிலையில் இயங்குகிறது. கிராமப்புற, நகர்புற மக்கள் சிரமப்படக் கூடிய அளவில் பேருந்துக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படும். விலைவாசி இன்னும் பல மடங்கு உயரும். சாதாரண மக்கள் இந்தக் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

தமிழக அரசு நிர்வாக சீர்கேட்டைச் சரிசெய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. அடித்தட்டு மக்கள் மீது தான் எல்லா சுமையையும் திணிக்கப்படுகிறது. அதிகக் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும். எந்த விகிதாச்சார அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. போக்குவரத்துக்கழகம் என்பது மக்களுக்குச் சேவை செய்யும் துறை. இதற்கு தேவையான நிதியை அரசு தான் வழங்க வேண்டும். அப்பாவி பயணிகளிடம் வசூலிப்பது தவறானது' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க