வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (21/01/2018)

கடைசி தொடர்பு:15:55 (27/06/2018)

திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நகராட்சி ஆனது புதுக்கோட்டை!

புதுக்கோட்டை நகராட்சிக்கு புது வருடத்தின் துவக்கத்திலேயே புது பெருமைக் கிடைத்துள்ளது. அது, திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகராட்சியாக, புதுக்கோட்டையை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. இதனால், புதுக்கோட்டை மக்கள் பெருமிதம் அடைந்திருக்கிறார்கள். 

மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் நாடு முழுக்கத் தேர்வு செய்யப்படும் நகரங்களில் மத்திய தரக் குழு ஆய்வு செய்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி எந்த நகரங்களின் நகராட்சிகள் பொதுக் கழிப்பறைக் கட்டி, சுத்தத்தைப் பராமரித்து, வருகின்றதோ, அந்த நகரத்தில் இந்த ஆய்வுக்குழு, நேரில் சென்று ஆய்வு செய்து தூய்மை நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ அறிவிக்கின்றது. அந்த வகையில், கடந்த 11.01.2018.அன்று புதுக்கோட்டை நகருக்கு வந்த 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு, 42 வார்டுகளிலும் ஆய்வு செய்தது. அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களிடம் பேசியும் சென்றது இந்த ஆய்வுக்குழு. பத்து நாட்கள் கடந்த நிலையில், இன்று புதுக்கோட்டை நகரை மேற்படி பெருமை பெற்ற நகராக அறிவித்திருக்கிறது. 

இந்தநிலையில், சில முணுமுணுப்புகளையும் நகரத்தில் கேட்க முடிகிறது. 'அசுத்த நாற்றத்துக்குப் புகழ் பெற்ற புதுக்கோட்டை புதிய பேருந்து நிறுத்தத்தை அந்த மத்தியக் குழு ஆய்வு செய்ததா?. நகராட்சி ஆணையர் அங்கு அழைத்துச் சென்றாரா?. 42 வார்டுகள் மட்டும் சுத்தமாக, சுகாதாரமாக இருந்தால் போதுமா? பேருந்து நிலையத்துக்கு அது பொருந்தாதா? என்று புதிய பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, அடுக்கடுக்கான கேள்விகள் சீறிப் பாய்கின்றன. தவிர, நகராட்சி சார்பில் அதன் ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் இன்று வெளியிட்டுள்ள நன்றி அறிவிக்கும் அறிக்கையில், ஆய்வுக்குழு கடந்த வருடம் அதாவது, 11.01.2017. அன்று வந்துச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளது.

வருடத்தைக் குறிப்பிடும் சின்ன விஷயத்தில் கூட இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார் நகராட்சி ஆணையர் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றியெல்லாம் கேட்பதற்காக நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியனைத் தொடர்புக் கொண்டோம். புதுக்கோட்டை நகரப்பேருந்து நிலையத்தில் இருப்பதாகக் கூறிய அவரிடம் பேசினோம். ‘’மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தினை  நடைமுறைப்படுத்தும் நோக்கில் நாங்கள் தீவிரமாக செயல்பட்டோம். நகரில், தனிக் கழிவறை, பொதுக் கழிவறை என்று மொத்தம் 1,467 கழிப்பிடங்களைக் கட்டி இருக்கிறோம். இதன்மூலம், திறந்த வெளியிடங்களில் மலம் கழிக்கும் செயலை முற்றிலுமாக குறைத்தோம். அத்துடன் மக்களுக்கு விழிப்புஉணர்வு அளிக்கும் விதமாக, துண்டுப்பிரசுரங்கள், பேரணி போன்றவற்றை முன்னெடுத்தோம்.

அதன்பிறகு, நாங்கள் செய்துக் காட்டிய விஷயங்களை டெல்லியில் உள்ள தூய்மை இந்தியாத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அலுவலகத்துக்கு அனுப்பினோம். அங்கிருந்து 3 பேர் கொண்ட ஆய்வுக்குழு நகரில் உள்ள 42 வார்டுகளிலும் ஆய்வு செய்துச் சென்றது.இன்று, திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத நகராட்சியாக அறிவித்திருக்கிறது"என்றவரிடம், 'அந்த ஆய்வுக்குழு பேருந்து நிலையத்தைச் சுற்றிப் பார்த்ததா?'என்று கேட்டோம். "இல்லை. வார்டுகளை மட்டும் பார்வையிட்டுச் சென்று விட்டார்கள். பேருந்து நிலையம் முன்பிருந்த நிலைமையை விட இப்போது மேம்பட்டிருக்கிறது. இன்னும் அதனைச் சீர் செய்யும் நோக்கில்தான் இப்போது பேருந்து நிலையத்தை நான் ஆய்வு செய்துக் கொண்டிருக்கிறேன். மிக விரைவில், பேருந்து நிலையம் தூய்மையாக மாறும்" என்றார். அவரிடம் இறுதியாக, அறிக்கையில் வருடம் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது பற்றி சுட்டிக்காட்டினோம். உடனடியாக அதனைப் பார்த்தவர், "பிழை நடந்து விட்டது. திருத்திவிடுகிறேன்" என்றார்.